‘எய்தவன்’ – விமர்சனம்

கலையரசன் முதல் முறையாக முழு ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘எய்தவன்’. திறமை இருந்தும், தகுதி இருந்தும் தன் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் எந்தளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள், அவரது அண்ணன், தங்கை, அப்பா, அம்மா இவர்களெல்லாம் என்னன்ன பாடுபடுகிறார்கள் என்பதை ஆக்ஷன் மசாலா சேர்த்து சொல்லியிருக்கிறார் சக்தி ராஜசேகரன் எனும் அறிமுக இயக்குனர்.

ரூபாய் நோட்டுக்களை எண்ணும் மிஷினை சப்ளை செய்யும் மிடில் கிளாஸ் இளைஞனான கலையரசனின் தங்கை ப்ளஸ் டூ தேர்வில் 1162 மார்க்க்குகள் பெற்று தன் சிறுவயது கனவான எம்.பி.பி.எஸ். படிப்பைப் படிக்க விரும்புகிறார். ஆனால் கவுன்சலிங்கில் கவர்ன்மெண்ட் கோட்டா சீட் முடிந்துவிட, தனியார் கல்லூரியில் தங்கையை சேர்க்க முடிவெடுக்கிறார் கலையரசன். நன்கொடையாக தனது சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் ஐம்பது லட்சத்தைப் புரட்டி கல்லூரி புரோக்கரிடம் கொடுக்கிறார். அந்தக் கல்லூரிக்கு அரசு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கும் விஷயம் பிறகுதான் தெரிகிறது. இதனால் பணத்தைத் திருப்பிக் கேட்கப்போய் பிரச்சினையாகிவிட, இதன் விளைவாக தங்கையின் உயிரையே பலிகொடுக்கும் கலையரசன் அந்த கல்லூரி நிர்வாகி முதல் புரோக்கர் வரை எப்படி பழிவாங்கி, தன் தங்கையைப் போலவே பணத்தை இழந்து பரிதவிக்கும் மற்ற மாணவர்களின் பணத்தை மீட்கிறார் என்பதே மீதிக்கதை.

ஷங்கர் பாணியில் முதல் படத்திலேயே மாணவர்களின் கல்விப் பிரச்சினையைத் தொட்டிருக்கும் சக்தி ராஜசேகரனுக்கு வாழ்த்துகள். படம் ஆரம்பித்து முதல் ஃப்ரேமிலேயே கதையை ஆரம்பித்துவிடுகிறார். தெளிந்த நீரோடை போல அழகாக செல்லும் திரைக்கதை தங்கை இறந்த பின் இன்னும் எகிறி அடித்திருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு ஹீரோவின் வழக்கமான திட்டமிடல், வில்லனின் அடாவடித்தனம், குத்துப் பாட்டு என்று கொஞ்சம் இறங்குகிறது. இருந்தாலும் திரைக்கதைக்கு தேவையே இல்லாமல் ஒரு காட்சி கூட இல்லை. அந்தளவுக்கு படத்தை விறுவிறுப்பாக்க முயன்றிருக்கிறார் இயக்குனர்.

கலையரசன். முதல் முழு கமர்ஷியல் ஹீரோ என்பதால் ஓபனிங் சாங், பில்டப் ஃபைட் என்றெல்லாம் இல்லாமல் யதார்த்தமான மிடில் கிளாஸ் இளைஞனின் கோபத்தை உணர்ந்து அளவாக, சரியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சாட்னா டைட்டஸ். பெயரைப்போலவே டைட்டான ட்ரெஸ்ஸில் போலிஸ் அதிகாரியாகவும், கலையரசனின் காதலியாகவும் நடித்திருக்கிறார். இவருக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் அழகு தேவதையாக அவ்வப்போது நம்மை ‘ஜில்’லாக்குகிறார்.

வில்லன் கெளரவ். அசால்ட்டான வில்லத்தனத்தை பிசிறில்லாமல் செய்துள்ளார். நல்ல வேடங்களை தேர்ந்தெடுத்தால் ஒரு மிரட்டல் வில்லன் தமிழ் சினிமாவுக்கு ரெடி.

நரேன். வழக்கம்போல் இந்த படத்திலும் தத்ரூபமான நடிப்பைத் தந்துள்ளார். குற்ற உணர்வால் அவர் எடுக்கும் முடிவு பரிதாபம்.

தர்மனாக வரும் கிருஷ்ணாவிற்கு இப்படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான கேரக்டர். நன்றாகவே செய்துள்ளார்.

கலையரசனின் தங்கையாக நடித்திருப்பவர் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தங்கையை நினைவுபடுத்துகிறார். சிறந்த நடிப்பு வாழ்த்துகள். அப்பாவாக வேல.ராமமூர்த்தி, ராதா கச்சிதம்.

பிரேம் குமாரின் ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்புக்குக் கை கொடுத்துள்ளது. அதே சமயம் படத்தின் பட்ஜெட்டிற்காக பல இடங்களில் காமப்ரமைஸ் செய்திருப்பதும் தெரிகிறது.

பார்த்தவ் இளங்கோவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் பின்னணி இசை செம எரிச்சல். அடுத்த படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நலம்.

மொத்தத்தில்

‘எய்தவன்’ – குறி தவறவில்லை.

 

You might also like More from author

%d bloggers like this: