‘லென்ஸ்’ – விமர்சனம்

பொதுவாக ‘பஜனை’ என்றாலே பல விளக்குகளில் தீபம் ஏற்றி வெளிச்சம் ஜொலிக்க அனைவரின் முன்னிலையிலும் தீபாராதனை காட்டுவதுதான். இது ‘சாமி பஜனை’க்கு வேண்டுமானால் ஓகே. ஆனால் ஆண் பெண் மட்டும் நடத்தும் அந்தரங்க ‘பஜனை’க்கு டிம் லைட் வெளிச்சம் கூட வேண்டாம் என்ற விழிப்புணர்வுக் கருத்தையும், ‘’கசாப்புக் கடைக்காரனைவிட கறியை சப்பிடுபவனே அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவன்’’ என்ற பழமொழிக்கேற்ப அடுத்தவர்களின் அந்தரங்கத்தை இணையத்தில் பதிவேற்றுபவனைவிட அதனை பலமுறை கண்டுகளிப்பவனே கேவலமானவன், தண்டிக்கப்பட வேண்டியவன் என்ற சவுக்கடி மெசேஜையும் இந்த ‘லென்ஸ்’ மூலம் பூதாகரப்படுத்திக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

மிஸா கோஷல் போன்ற அழகான மனைவியுடன் அபார்ட்மெண்டில் வாழ்ந்து வரும் ஜெயப்பிரகாஷுக்கு சமூக வலைத்தளத்தில் ஆன்லைன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் அலாதி இன்பம். அபப்டி ஒருநாள் ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொள்கிறார். ஆனால் அந்தப் பெண்ணின் ஐடியில் வரும் மொட்டைத்தலை சாத்தான் ஆனந்த் இவரின் ஆன்லைன் செக்ஸ் வீடியோவை ரெக்கார்ட் செய்திருப்பதாகக் கூறி, அந்த வீடியோவையும் இவரிடம் காட்ட, அதிர்கிறார் ஜெயப்பிரகாஷ். தான் சொல்வதையெல்லாம் கேட்காவிடில் இந்த வீடியோவை இப்போதே பதிவேற்றி விடுவேன் என்று சொல்லி, சில கட்டளைகளை பிறப்பிக்கிறார். அதாவது மாஸ்க் அணிந்த ஒரு பெண்ணை பெட்ரூமில் நிர்வாணப்படுத்தி, ஜெயப்பிரகாஷைப் பார்க்க வைக்கிறார். பிறகு மாஸ்கைக் கழட்ட, அந்த பெண் ஜெயப்பிரகாஷின் மனைவியான மிஷா கோஷல். கதறும் ஜெயப்பிரகாஷ், ‘’நீ யார்… உனக்கு என்ன வேண்டும்…?’’ எனக் கெஞ்ச, சாத்தான் ஆனந்த் தனது ப்ளாஷ்பேக்கை சொல்ல, அதன் முடிவில் ‘உண்மையான சாத்தானே’ ஜெயப்பிரகாஷ்தான் என்று சொல்லுமளவுக்கு தனது அந்தரங்க வெறியால் ஒரு குடும்பத்தையே சின்னாபின்னமாக்கியவன் என்ற உண்மை தெரிய வருகிறது. ஜெயப்பிரகாஷுக்கு ஆனந்த் தரும் தண்டனை என்ன என்பதே சில்லிங் த்ரில் க்ளைமாக்ஸ்.

இயக்குனரும், நடிகருமாக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இன்று உலவிக் கொண்டிருக்கும் பல வக்கிரம் பிடித்த ஆண் மிருகங்களின் பிரதிபலிப்பாக நடித்துள்ளார். ‘’இந்தமாதிரி மிருகங்கள் நம் நண்பனாக, பக்கத்து வீட்டு நபராக, நமது உறவினராக, நம் வீட்டு வேலைக்கு வரும் பிளம்பராக, கார்பெண்டராக, யார் வேண்டுமானாலும் இருக்கலாம்’’ என்று எச்சரிக்கை மணியை அடித்துள்ளார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ். ஒரு தனி மனிதனின் அல்ப வக்கிரம் எப்படியெல்லாம் ஒரு அப்பாவி குடும்பத்தையே அழிக்கிறது என்பதை ஆனந்த், அஸ்வதி தம்பதியரின் கதை மூலம் தத்ரூபமாகக் காட்டியுள்ளார்.

ஆனந்த். தோற்றத்திலும், குரல் வளத்திலும் ரகுவரனை ஞாபகப்படுத்தும் அவர் நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். முதல் பாதியில் வில்லன், இரண்டாம் பாதியில் நல்கணவன் என இருவேறு பரிமாணத்திலும் சிறந்த நடிகன் என்பதை நிரூபித்துள்ளார்.

நிஜ ஏஞ்சலாகவே அஸ்வதி. அற்புதமான நடிப்பை நல்கியுள்ளார். அதுவும் ஒரே ஷாட்டில் தனது அந்தரங்க வீடியோவைப் பார்த்தவர்களின் முன் லைவ்வில் பேசிக் கொண்டே தற்கொலை செய்து கொள்ளும் சீனில் நம்மை பதற வைக்கிறார்.

மிஷா கோஷல். நல்ல நடிகையான அவருக்கு இந்த படம் சொல்லிக்கொள்ளும்படியான பதிவு.

குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனின் வேகமான விறுவிறுப்பான திரைக்கதை நம்மைக் கட்டிப்போடுகிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், வெங்கடாசலம், ஜெய்நூல்அப்தீன், காஜின் கூட்டணியின் எடிட்டிங்கும் படத்திற்கு பலமான தூண்கள்.

தற்போதைய சமூகத்திற்கு மிகவும் தேவையான விழிப்புணர்வு கொண்ட இப்படத்தை ரிலீஸ் செய்திருக்கும் வெற்றி மாறனுக்கு பல கோடி பாராட்டுக்கள்.

மொத்தத்தில்

‘லென்ஸ்’ – நிச்சயம் ஒவ்வொரு ஆணும் தனது இணையுடன் பார்க்க வேண்டிய கட்டாயத் திரைப்படம்.

 

 

You might also like More from author

%d bloggers like this: