‘பாகுபலி’ 2 – விமர்சனம்

பீடா விற்பவர் முதல் பிரதம மந்திரி வரை ‘’கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்…?’’ என்று இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘பாகுபலி’ இரண்டாம் பாகம் ஒருவழியாக வந்துவிட்டது. இந்திய இயக்குனர்களில் உச்சாணிக் கொம்பில்போய் அமர்ந்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி.

இதுவரை இந்திய சினிமாவில் எத்தனையோ சரித்திரக் கதைகள் படமாக எடுக்கப்பட்டிருந்தாலும் ஒன்று அவை கமர்ஷியலாக இருந்து தரத்தில் குறை வைத்திருக்கும். அல்லது உலகத் தரத்தில், ஓவர் அறிவுஜீவித்தனமாக இருந்து மக்களிடம் கமர்ஷியலாக போணி ஆகியிருக்காது. ஆனால் தரத்திலும் ரசனையிலும், புரிதலிலும் எவ்வளவு பிரம்மாண்டமோ அதன் ஒவ்வொரு நுனியும் எளிமையாக புரிய வைக்கும், அனுபவிக்க வைக்கும் நோக்கத்திற்காக ராட்ஷஷ உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் ராஜமௌலி அண்ட் டீம். நாடி, நரம்பு, மூளை, சதை என அத்தனையிலும் சினிமா வெறி ஊறிப் போன ஒருத்தராலத்தான் இந்தப் படமெல்லாம் எடுக்க முடியும். அந்த ஒருத்தன் நான்தான் என ஃபிரேம் பை ஃபிரேம் மார்தட்டி, கம்பீரமாக நின்றிருக்கிறார் ராஜமௌலி.

படத்தின் துவக்கத்தில் மதம் பிடித்த யானையை தேர் மூலம் தடுப்பது, மாட்டுக் கொம்பில் தீ வைத்தும், அணையை உடைய வைத்தும் எதிரிகளை துவம்சம் செய்வது, கோழையின் பாத மிதத்திலை வைத்து அவனும் வீரன்தான் என உசுப்பி விடுவது, காட்டுப் பன்றிகளை வயலில் அடக்கும் காட்சி, பெண்ணை தீண்டியவனை கை விரல்களை வெட்டுவது தவறு என சொல்லி, அவன் தலையை வெட்டுவது, க்ளைமாக்சில் மரத்தினை வளைத்து அதன் மூலம் எதிர்களின் அரண்மனைகளுக்கும் நுழைவது என கிரியேஷனுக்கு வஞ்சனை இல்லாமல் உழைத்திருக்கிறார் ராஜமௌலி.

அடுத்ததாக விஎஃப்எக்ஸ். ஆராயக்கூடாது. அனுபவிக்கனும் என்பது போல எது செட், vfx, எது நிஜ லொக்கேஷன் என நம்மை யோசிக்க விடாமல் மகிழ் மதி நாட்டிற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

கதை என்று பார்த்தால் ஒரு நேர்மையான, கம்பீரமான, அப்பழுக்கற்ற ராஜ வம்சம் துரோகத்தால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது, வீரத்தாலும், பாசத்தாலும் எப்படி மீண்டும் அந்த வம்சம் தழைக்கிறது என்ற ஒன்லைன்தான். ஆனால் உணர்வுப்பூர்வமான திரைக்கதையாலும், அசுரத்தனமான மேக்கிங்கிலும் ஹாலிவுட் சினிமாவிற்கே இந்திய சினிமாவின் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கிறார் ராஜமௌலி.

தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் பிரபாஸ். ஒரு அரசன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என பாகுபலி கேரக்டராகவே வாழ்ந்து அடி முதல் நுனி வரை வாழ்ந்திருக்கிறார். இனி இவர் பெயர் பிரபாஸ் என்பதே மறந்துபோய் சில வருடங்களுக்கு பாகுபலியாத்தான் மக்கள் மனதில் வலம் வருவார்.

அனுஷ்கா. ஒரு இளவரசிக்கு உரிய அழகு, நளினம், வீரம், கோபம் என அனைத்திலும் அசத்தல்.

வில்லன் ராணா டக்குபதி பிரபாசுக்கு கொஞ்சமும் குறைவில்லாத அதே கம்பீரம், ராஜ நடை எனப் பிளிறியிருக்கிறார்.

சீனியர்களான ராஜமாதா ரம்யா கிருஷ்ணன், கட்டப்பா சத்யராஜ், நய வஞ்சகராக நாசர் என அனைவருக்குமே இது வாழ்நாள் சாதனைப் படம் என்று சொன்னால் மிகையாகாது. மூன்று பேருமே தங்கள் கேரக்டரை சும்மா ஊதித் தள்ளிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

முதல் பாகத்தின் வெற்றிக்கு ஒரு தூணாக இருந்த தமன்னாவிற்கு இந்தப் படத்தில் வேலை இல்லை என்பதே உண்மை.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் போட்டிப் போட்டுக்கொண்டு நர்த்தனம் ஆடியிருக்கின்றன.

ராஜமௌலியே நினைத்தலும் இனி பாகுபலியை மிஞ்ச முடியுமா என்ற சந்தேகம் நிச்சயம் வருகிறது.

இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமையும் அனுபவிக்க வேண்டுமென்றால் நிச்சயம் திரையரங்கில் சென்று பார்த்தால்தான் புரியும். அப்படிப் பார்ப்பவர்கள் பாக்கியவான்கள். திருட்டு விசிடியில் பார்ப்பவர்கள் பரிதாபமானவர்கள்.

மொத்தத்தில்

‘பாகுபலி’ – இந்திய சினிமாவின் கம்பீரம்

You might also like More from author

%d bloggers like this: