‘நகர்வலம்’ – விமர்சனம்

பூபதி பாண்டியனின் இயக்கத்தில் ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான பாலாஜி நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘நகர்வலம்’. இப்படத்தில் பாலாஜிக்கு ஜோடியாக தீக்ஷிதா மணிகண்டன் நடித்துள்ளார். மார்க்ஸ் என்பவர் இயக்கியுள்ளார்.

தண்ணி லாரி ஓட்டும் பாலாஜி ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று கம்முனுக் கிடக்க, பள்ளி மாணவியான தீக்ஷா இவர் மீது காதல் பார்வை வீச, ‘இதற்குதானே வெயிட்டிங்’ என்பதுபோல கப்பென காதல் தீ இவருக்கும் பற்றிக் கொள்கிறது. இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் காதல் வளர்த்துக் கொண்டே போக, ஒருவழியாக தீக்ஷிதா வீட்டில் தெரிந்து புயல் கிளம்புகிறது. ஆனால் தீக்ஷிதாவின் அப்பாவும், அண்ணாவும் ஒரு கட்டத்தில் சமாதானமானாலும் அரசியல்வாதியான இவரின் சித்தப்பா சாதி வெறி காரணமாக தீக்ஷிதாவையும், பாலாஜியையும் கொல்ல முடிவெடுக்கிறார். ஆனால் தீக்ஷிதாவின் அண்ணன் இவர்களை பாதுகாக்க முயற்சி எடுக்க, க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத நெஞ்சைப் பதற வைக்கும் அதிர்ச்சி ட்விஸ்ட்.

‘காதல்’, ‘பருத்தி வீரன்’ போல ஒரு கனமான காதல் கதையை தர வேண்டும் நினைத்திருக்கிறார் இயக்குனர் மார்க்ஸ். ஆனால் சுவாரஸ்யமான சீன்களோ, முக்கால்வாசிப் படம் வரை எந்த ஒரு சிறு திருப்பங்களுமே இல்லாதது மிகப் பெரிய பலவீனம். க்ளைமாக்ஸ் மட்டும் கனமானதாக இருந்தாலும்கூட வேண்டுமென்றே திணிக்கப்பட்டதாகவே உள்ளதால் மனதில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் நாம் வெளிவருகிறோம்.

ஹீரோவாக பாலாஜி. தண்ணி லாரி ஓட்டும் இளைஞனாக நன்றாகவே நடித்திருக்கிறார். காதலில் விழுவதும், காதலியோடு காதல் வசனம் பேசுவதும், காதலி அண்ணனின் கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படாமல் தில்லாக எதிர்த்து நிற்பதும், காதலியின் கொடூர நிலைக் கண்டு மனம் உடைவதும் என சிறப்பாகவே தனது கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்.

தீக்ஷிதா. தமிழுக்கு ஒரு அற்புதமான நடிக்கத் தேர்ந்த ஹீரோயின் கிடைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, காதலி, தங்கை, மகள் என எல்லா பரிமாணத்திலும் சிறு தடுமாற்றமோ, தயக்கமோ இல்லை இவரது நடிப்பில். நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்.

பாலசரவணனும், யோகி பாபுவும் நம்மை ஆங்காங்கே சிரிப்பூட்டுகிறார்கள்.

மாரிமுத்து, நமோ நாராயணன், முத்துக்குமார், ரவி, அஞ்சாதே ஸ்ரீதர் என அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பவன் கார்த்திக்கின் இசையில் சில பாடல்கள் இளமைத் துள்ளல் ரகம். பின்னணி இசை பல இடங்களில் படுத்துகிறது.

தமிழ்த் தென்றலின் ஒளிப்பதிவும், மணிகண்ட பாலாஜியின் எடிட்டிங்கும் படத்தை ஓரளவேனும் காப்பாற்றுகின்றன.

திரைக்கதையில் கவனம் செலுத்தி, அழுத்தம் கூட்டியிருந்தால் ‘நகர்வலம்’ வெற்றி ஊர்வலமாக இருந்திருக்கும்.

மொத்தத்தில்

‘நகர்வலம்’ – அலுப்பூட்டும் பயணம்

You might also like More from author

%d bloggers like this: