‘’ரஹ்மான் மாமா இசையில் நடிக்கும் பாக்கியம் மிஸ்ஸாகிடுமா…?’’ அச்சத்தில் ஜி.வி.பிரகாஷ்

‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற இரண்டு ஹிட் படங்களால் ஒரு டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் கையிருப்பாக அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். அதில் ஒரு படம் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கும் ‘சர்வம் தாள மயம்’. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷின் தாய் மாமாவான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மானே தன் படத்திற்கு இசையமைப்பதால் பூரிப்படைந்த ஜி.வி.பிரகாஷ் அந்த நாளை எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் ராஜீவ் மேனன் ஒரு ஹிந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருவதால் ‘’சர்வம் தாள மயம் படத்தை ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆரம்பிக்கலாம்’’ என்று கூறிவிட, அந்தப் படத்தின் கால்ஷீட்டை பாலா இயக்கும் ‘நாச்சியார் ஐ.பி.எஸ்’ படத்திற்கு வழங்கினார். ஆனால் பாலா படம் சொன்ன தேதிக்குள் முடிந்துவிட்டால்தான் ராஜீவ் மேனன் படத்தில் நடிக்க முடியும். ஒருவேளை வழக்கம்போல பாலா தாமதப்படுத்தினால் ‘’தாய் மாமன் இசையில் நடிக்கும் பாக்கியம் தவறிவிடுமோ..?’’ என அச்சம் கலந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.

You might also like More from author