‘கடம்பன்’ – விமர்சனம்

‘’காட்டை அழிப்பது நம் தாயின் கருவறைக்குள் இருந்துகொண்டே வயிற்றைக் கிழிப்பது போன்றது. அழிவு நமக்குத்தான்’’ என்ற கருத்தை வலியுறுத்துகிறான் ‘கடம்பன்’.

கடம்பவனம் என்கிற மலைக்காட்டில் தான் உண்டு தன் இனம் என்று தன் மலைவாழ் மக்களோடு வாழ்ந்து வருகிறார் கடம்பனான ஆர்யா. மலையடிவாரத்தில் குதித்துத் தேன் எடுப்பது, மீன் பிடிப்பது போலான காட்டு வேலைகளை செய்யும் ஆர்யாவை அந்த கிராமமே ஹீரோவாகப் பார்க்கிறது. அந்த ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின்தான் கேதரின் தெரசா. ஹீரோ, ஹீரோயின் இருந்தால் வில்லன் வரத்தானே வேண்டும். மலைப் பிரதேசத்தின் சிமென்ட் உற்பத்தி செய்யும் வேதிப் பொருளை எடுப்பதன் நோக்கத்தோடு திட்டம் இடுகிறான் வில்லன். என்னதான் சதித் திட்டம் தீட்டினாலும் பிடிகொடுக்காத மலைமக்களை வன்முறையால் அழித்தொழிக்க முயல, பல சிரமங்களுக்குப் பிறகு தன் உயிரைப் பணயம் வைத்து, மற்றவர்களின் உயிர்களை பறிகொடுத்து எப்படி காட்டை மீட்கிறார் ஆர்யா என்பதுதான் கதை.

கல்பாக்கம் அணுமின் நிலையம், மீத்தேன் வாயு, ஹைட்ரோ கார்பன் உலை என நடைமுறையில் நடந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டின் அராஜக அழிவுச் செயலை கதையாக எழுதியதற்கே கைத்தட்டி வரவேற்கலாம் இயக்குனர் ராகவாவை. காட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும், கார்ப்பரேட்டின் சகுனி வேலைகளையும் பட்டவர்த்தனமாகக் காட்டியதன் மூலம் முதல் பாதியில் ஜெயித்த ராகவா இரண்டாம் பாதியில் அதற்கு நேர்மாறாக அக்மார்க் கமர்ஷியல் சினிமாத்தனங்களை காட்சிப்படுத்தியதன் மூலம் சறுக்கியிருக்கிறார். அதுவும் காட்டுக்குள் வில்லனின் ஆட்கள் நூறுபேர் ஏ.கே.ரகமிஷின் கன்களை தூக்கிக் கொண்டு வருவதெல்லாம் இந்தியாவில் எப்படி சாத்தியம் என்பது அந்த ராகவாவுக்கே வெளிச்சம். அவ்வளவு துப்பாக்கிக் குண்டுகள் சுட்டும் ஆர்யா உடலில் ஒரு குண்டுகூட படவில்லை என்பதெல்லாம் வேறு விஷயம்.

இரண்டாம் பாதியிலும் இயல்பான உயிரோட்டமான காட்சிகளை வைத்திருந்தால் ‘கடம்பன்’ கம்பீர வெற்றி பெற்றிருப்பான்.

ஆர்யா. ‘’உயிரைக் கொடுத்து உழைத்துள்ளார்கள்’’ என்று சொல்வோமே அதற்கு நூறு சதவீதம் பொருந்துகிறார் ஆர்யா. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆர்யா உழைப்பால் சிந்திய வியர்வை தெரிகிறது. உடல்மொழி, வசனம் என அனைத்திலும் ஆர்யா அடுத்த கட்ட நடிப்பை வழங்கியுள்ளார் என்பதே உண்மை.

கேதரின் தெரசா. வீரனான ஹீரோவை துரத்தித் துரத்திக் காதலிக்கும் அக்மார்க் தமிழ் சினிமா ஹீரோயின். அதனை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

காமெடி என்ற பேரில் ஆடுகளம் முருகதாஸ் செய்வதைப் பார்த்தால் பரிதாபம்தான் தோன்றுகிறது.

சூப்பர் சுப்பராயன், பாரஸ்ட் ரேஞ்சர், கார்ப்பரேட் வில்லன்கள் என அனைவரும் கொடுத்த வேலைகளை செவ்வனே செய்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளே வந்தாலும், ஒய்.ஜி.மகேந்திரனும், அவரது மகளும் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.

ஆர்யாவிற்குப் பிறகு படத்தின் மொத்த பாரத்தையும் தன் தோளில் சுமப்பது ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார்தான். ஒரு காட்டுப் படத்திற்கு என்னமாதிரியான லைட்டிங் செட் செய்வது முதல் காட்டின் பரப்பைக் காட்சிப்படுத்தி ரசிகனுக்குக் திரையில் கடத்துவது வரை பார்த்துப் பார்த்து உழைத்திருக்கிறார் மனுஷன்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை விறுவிறுப்பூட்டினாலும் பாடல்களில் மொத்தமாக ஏமாற்றியிருக்கிறார்.

தேவின் எடிட்டிங் ஷார்ப் கட்டிங்.

மொத்தத்தில்

‘கடம்பன்’ – கடமையைச் செய்பவன் ஆனால் பலன்…?

You might also like More from author

%d bloggers like this: