‘சிவலிங்கா’ – விமர்சனம்

லாரன்சின் ‘முனி’, ‘காஞ்சனா’வோடு பி.வாசுவின் ‘சந்திரமுகி’யையும் ஃப்ரண்டாக்கினால் ‘சிவலிங்கா’.

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே ரயிலிருந்து தள்ளிவிடப்பட்டு, கொலை செய்யப்படுகிறார் சக்திவேல் வாசு. ஆனால் கோர்ட்டில் அவர் தற்கொலைதான் செய்துள்ளார் என்று பொய்த் தீர்ப்பு வழங்கப்படுகிறது. சக்தியின் காதலியின் வேண்டுகோளுக்கிணங்க அந்த கேஸ் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ ஆபிசர் லாரன்ஸ் ஆட்டம் பாட்டம் அதிரடி சண்டைகளுடன் என்ட்ரி ஆகிறார். கேஸை கண்டுபிடிப்பதற்கு முன் ரித்திகா சிங்கை திருமணம் செய்துகொண்டு ஹனிமூன் ப்ளஸ் சக்தி கொலை கேஸை கண்டுபிடிக்க வேலூர் வருகிறார். ஆனால் வந்த இடத்தில் ரித்திகா சிங்கின் உடலுக்குள் ஆவியாக புகுந்து அலைக்கழிக்கும் சக்தியின் ஆவி லாரன்சிடம் ‘’என்னைக் கொன்ற குற்றவாளி யார், எதற்காக என்னைக் கொன்றனர் என்பதை சீக்கிரம் கண்டுபுடி. அதுவரை உன் மனைவியின் உடம்பிலுருந்து வெளியேறமாட்டேன்’’ என அடம்பிடிக்க, உண்மையான கொலைகாரர்களை எப்படி கண்டுபிடித்துத் தண்டிக்கிறார் லாரன்ஸ் என்பதே ‘முனி’ ஸாரி ‘காஞ்சனா’ ஸாரி ஸாரி ‘சிவலிங்கா’ படத்தின் கதை.

லாரன்சின் முந்தையப் பேய்ப் படங்களின் டெம்ப்ளேட்டுக்களை அச்சுப் பிசகாமல் வைத்து அதனோடு ‘சந்திரமுகி’ ஃப்ளேவரை மிக்ஸ் செய்து திரைக்கதையாக்கியுள்ளார் பி.வாசு. தன் அனுபவ பலத்தால் முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை போரடிக்காமல் நம்மை உட்காரவைப்பதிலேயே ஜெயித்துவிடுகிறார். ஏற்கனவே பார்த்த சலித்தக் காட்சிகளை வைத்திருந்தாலும் இலகுவான இயக்கத்தின் மூலம் அந்தக் குறைகளை தெரியவிடாமல் செய்திருக்கிறார்.

முந்தையப் படத்தில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்றால் இதில் ‘சின்ன கபாலி’ என்ற அடைமொழியுடன் மக்கள் படை சூழ, அமர்க்களமாக அறிமுகமாகும் லாரன்ஸ் படம் முழுக்க ‘சந்திரமுகி’ ரஜினியின் க்ளோனிங்காகவே வருகிறார். ரித்திகாவுடன் ஜாலி ரொமான்ஸ், புறா மூலம் துப்பறியும் சாதுர்யம், வடிவேலுடன் சரவெடி காமெடி என முழுக்க முழுக்க நடமாடும் எனர்ஜி பேங்காக வலம் வருகிறார். டான்ஸ், பைட் என இரண்டிலும் வழக்கம்போல் தூள் பரத்தியிருக்கிறார்.

லாரன்சின் கிக்கான மனைவியாக ரித்திகா சிங். சில்க் சேலையுடன் படம் முழுக்க சிக்கென்ற உடலுடன் நம்மை கிக்கேற்றுகிறார். ஆனாலும் ஆவி புகுந்தவுடன் ஆட்டுவிக்கப்பட்டு ஆக்ரோஷமாக மிரட்டும்போதெல்லாம் ரித்திகா சிங்கின் நடிப்பிற்கான சிரத்தைத் தெரிகிறது. கனகச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தின் மையத் தூணே சக்திவேல் வாசுதான். இவரைச் சுற்றித்தான் மொத்தக் கதையும் நகர்வதால் தன் கேரக்டரை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அதுவும் க்ளைமாக்ஸில் லாரன்ஸ் காலில் விழுந்து கெஞ்சும் நடிப்பில் ‘’இவர் ஏன் இன்னும் பெரிய உயரத்திற்கு வராமல் இருக்கிறார்…?’’ என்ற கேள்வி எழுகிறது. நிச்சயம் இந்தப் படத்திற்குப் பிறகு சக்தியின் கேரியர் கிராஃப் அமோகமாக உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

இப்படியொரு வடிவேலுவின் காமெடியை பார்த்து ரசித்து எவ்வளவு நாளாச்சு… மனிதர் பார்வையாலேயே சிரிப்பு வாயுவை பரப்பி விடுகிறார். அதுவும் ‘’ஏன் புத்தர் திரும்பி இருக்காரு…?’’ என்று கேட்கும்போது தியேட்டரில் சிரிப்பலை ஓய சில நிமிடங்கள் ஆகின்றன.

விடிவி கணேஷ், ஊர்வசி, ஜெயப்பிரகாஷ், ராதாரவி ஆகியோரும் இருக்கிறார்கள். சக்தியின் காதலியாக நடித்திருக்கும் பெண்ணும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

தமனின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில் பின்னி இருக்கிறார். ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் ‘சிவலிங்கா’வின் முக்கிய பலமாகும்.

திரைக்கதை, இயக்கம் இரண்டிலும் அப்டேட் இருந்திருந்தால் ‘சிவலிங்கா’ சிக்சர் அடித்திருக்கும். இருந்தாலும் பவுண்டரி அடித்திருக்க வைத்திருக்கிறார் பி.வாசு.

மொத்தத்தில்

‘சிவலிங்கா’ – கமர்சியல் பக்தர்கள் தைரியமாக ஒருமுறை தரிசிக்கலாம்.

 

You might also like More from author

%d bloggers like this: