‘ப.பாண்டி’ – விமர்சனம்

‘’ரிப்பேராயிருக்குற டேப் ரிக்கார்டு கூட எதுக்காச்சும் உதவும்… ஆனா ரிடையர் ஆன பெருசுங்கள வச்சு என்ன பண்ண முடியும்…? போடுற சோத்தத் தின்னுட்டு மூலைல உக்காந்திருக்க வேண்டியதுதான…’’ என்று வயதான தாய் தந்தையை இளக்காரமாக நினைத்து, சலித்துக் கொள்கிற மகன், மகள்களுக்கு ‘பவர்’ பாண்டி மூலம் ‘பவர்ஃபுல்’ பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குனர் தனுஷ். வாழ்த்துக்கள்…

நல்ல மனைவி, பிடித்த ஸ்டண்ட் வேலை இந்த இரண்டையும் இழந்து ரிடையர் ஸ்டேஜில் தனது ஒரே மகன் பிரசன்னா வீட்டில் வாழ்ந்து வருகிறார் பவர் பாண்டி ராஜ்கிரண். அநீதியைக் கண்டு ஆக்ரோஷ பாண்டியாகப் பொங்கும் ராஜ்கிரண் அமைதி மகன் பிரசன்னாவுக்கு பெரும் தலைவலியாகத்தான் தெரிகிறார். ஒருமுறை ராஜ்கிரணின் தட்டிக் கேட்டுப் புரட்டி எடுக்கும் ஒரு செயல் ‘வீடு உண்டு ஆபிஸ் உண்டு’ என்று இருக்கிற பிரசன்னாவை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இழுத்து விட, பொங்கி எழும் பிரசன்னா ராஜ்கிரணை மேல் வெறுப்பை உமிழ, பொறுமையாக இருந்த ‘முறுக்கு’ பாண்டி ராஜ்கிரண் ‘சரக்கு’ பாண்டியனாக மாறி, நியாயப் பிரசங்கம் நடத்த, மனம் வெறுக்கிறார் பிரசன்னா. விடிந்ததும் நிலைமை ‘தெளிந்த’ பாண்டி பிராயச்சித்தமாக மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டே வெளியேறுகிறார்.

சூப்பர்.. இனி ‘சூர்யா வம்சம்’ சரத்குமார் போல சுயமாக முன்னேறி கெத்துக் காட்டப் போகிறார் என்று நாம் நினைத்தால் அங்கேதான் இயக்குனர் தனுஷ் ட்விஸ்ட் அடித்து, லவ் சிக்ஸர் அடித்திருக்கிறார். தன்னைப் புரிஞ்சிக்கிட்ட, தன்னை மாதிரியே இருக்குற, தன்னை நேசிச்ச ஆளோட கொஞ்ச நாள் ட்ராவல் பண்ணலாமே என்று தன் பழைய காதலி பூந்தென்றலை ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடித்து, அவரிடம் காதல் இளைப்பாருகிறார் பாண்டி. அப்பாவின் அருமை புரிஞ்ச மகன் பிரசன்னாவும் தவறை உணர்ந்து அப்பாவை அரவணைக்க சுபம்.

நாக்கு ருசிக்க நல்லி எலும்புக் கறிச்சோறு விருந்து சாப்பிடும் உற்சாகத்தோடு விளாசியிருக்கிறார் ராஜ்கிரண். தவறுதலாக செய்யும் சிறுசிறு தவறுகளுக்காக  மகன், மருமகளிடம் அவமானப்படுவது, வலிக்கு மருந்தாக இருக்கும் தன் பேரக் குழந்தைகளோடு செல்லம் கொஞ்சுவது, பக்கத்து வீட்டு வெட்டிப் பையனுடன் வெட்டி அரட்டை அடிப்பது, ஏரியா நண்டு சிண்டுகளின் நரம்பு, எலும்புகளை உடைப்பது, வலிநிவாரணியாக தன் காதலியிடம் தஞ்சமடையத் துடிப்பது என பவர் பாண்டியனாக படம் முழுக்க பற்ற வைத்த பட்டாசாக சரவெடியாக வெ(ந)டித்திருக்கிறார் ராஜ்கிரண்.

படத்தின் கடைசி அரைமணி நேரம் வந்தாலும் இயல்பான பாந்தமான நடிப்பில் தன்னை மிஞ்ச ஆளே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ரேவதி.

சின்ன வயசுப் பாண்டியாக தனுஷ். வழக்கம்போல் ரகளை பாதி ரவுசு மீதி. மடோனாவை பிரியும்போது கண்களில் காட்டும் எக்ஸ்பிரஷன்ஸ்.. சான்சே இல்லை. அந்தக் காட்சியில் மட்டும் இயக்குனர் தனுஷை ஓவர் டேக் செய்கிறார் நடிகர் தனுஷ்.

சின்ன வயசு ரேவதியாக மடோனா செபாஸ்டின். அப்பழுக்கில்லாத அழகைப் போலவே நடிப்பிலும் மின்னுகிறார்.

அப்பாவை வெறுக்கவும் முடியாமல் கோபத்தை மறைக்கவும் முடியாமல் திட்டிவிட்டு, பிறகு திண்டாடி, இறுதியாக பாசத்தை வெளிப்படுத்தும் அப்பர் மிடில் கிளாஸ் இளைஞனாக பிரசன்னா அசத்தல்.

பிரசன்னாவிற்கு ஜாடிக்கேத்த மூடியாகப் பொருந்திப்போகிறார் சாயாசிங்.

படத்தை மேலும் அழகூட்டும் பேரக்குழந்தைகளும், கலகலப்பூட்டும் பக்கத்து வீட்டுப் பையனும் சிறப்பு. பையனின் நடிப்பிற்கு நிச்சயம் பெரிய இடம் காத்திருக்கிறது.

அனிருத்தின் ஆப்சன்ட்டை ஃபில் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் ஏமாற்றாமல் முழு நிறைவைத் தந்திருக்கிறார்.

பவர் பாண்டிக்கு பலம் சேர்த்திருப்பது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் என்றால் மிகையாகாது.

இயக்குநராகக் களமிறங்குகிறோம் என மாஸ் கமர்ஷியல் படம் கொடுத்து வெத்து கெத்து காட்ட விரும்பாமல் சத்தான கதையை நம்பி, இயல்பான குடும்பச் சித்திரத்தை இயக்கியிருக்கும் தன்னம்பிக்கைக்காகவே இயக்குனர் தனுஷை இருகரம் கூப்பி வரவேற்கலாம்.

மொத்தத்தில்

ப.பாண்டி – பவர்(ஃபுல்) பாண்டி.

 

 

You might also like More from author