8 தோட்டாக்கள் – விமர்சனம்

பொதுவான நம்ம வீட்டுலயோ, ஆபிஸ்லயோ ஏதோ முக்கியமான பொருளோ, வேறு எதுவோ காணாம போனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன் குடுப்போம். ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற சப் இன்ஸ்பெக்டரே ஒரு பொருள தொலைச்சுட்டாருன்னா…? அந்த முக்கியமான பொருள் எட்டு புல்லட்ஸ் லோடு ஆகியிருக்கிற துப்பாக்கியா இருந்தா…? சரி.. அப்பவும் அந்தத் துப்பாக்கி கிரிமினல்ட்ட மாட்டிருந்தாகூட நம்ம போலீஸ் அவங்க கிரிமினல்ஸ் டேட்டா பேஸ வச்சும், அவங்க சோர்ஸ் மூலமாவும் கண்டுபுடிச்சிரலாம்…. ஆனா இந்த சொசைட்டி மேல கொலை பண்ற அளவுக்கு செம காண்டுல இருக்குற ஒரு சாதாரண மனிஷன்ட்ட கிடைச்சுதுன்னா…? இப்படி எடுத்த ஒன்லைன்லயே பரபரப்பு கூட்டுற திரைக்கதையோட களமிறங்கியிருக்காரு அறிமுக இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.

சின்ன வயசுலேயே செய்யாத ஒரு கொலைக்கு மைனர் ஜெயில்ல தண்டனை அனுபவிக்கிற நம்ம ஹீரோ வெற்றி, ஒருமாறி தாழ்வு மனப்பான்மையோட, பயந்த சுபாவத்தோட சுருக்கமா சொன்னா அக்மார்க் நல்லவனா ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல சப் இன்ஸ்பெக்டரா குப்பை கொட்டுறாரு. ரொம்ப நல்லவனா இருந்தாத்தான் நம்மாளுகளுக்குப் புடிக்காதே.. குறிப்பா போலீஸுக்கு. ஸோ அந்த ஸ்டேஷன்ல இருக்குற எல்லா போலீஸும் ஹீரோ மேல கடுப்புலதான் இருக்காங்க. ஒரு நாள் தப்பு போலீஸ் இன்ஸ்பெக்டரான மைம் கோபி, ஹீரோமேல் இருக்குற கடுப்புல, அவர ஒரு கிரிமினல ஃபாலோ பண்ணச் சொல்லி, எட்டு புல்லட்ஸ் லோட் பண்ணுன துப்பாக்கிய தர, அந்த துப்பாக்கிய ஒரு பஸ்ல ஒரு பிக்பாக்கட் பையன்ட்ட பரிகொடுத்துடுறாரு ஹீரோ. கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தர லேட்டனதலா மைம் கோபி அவருக்கு ஒருநாள் டைம் தந்து துப்பாக்கிய கண்டுபிடிக்க சொல்ல, அந்த நேரம் பார்த்து அந்த துப்பாக்கியோட மூணு பேர் ஒரு பேங்கக் கொள்ளையடிக்கிறாங்க. அந்த சமயத்துல ஒரு அப்பாவி குழந்தையும் சாகடிக்கப்படுது. இப்படி துப்பாக்கிக் கிடைக்கறதுக்குள்ள அதிலிருக்குற ஒவ்வொரு புல்லட்டுக்கும் யாரெல்லாம் பலியாவுறாங்க, ஹீரோ துப்பாக்கியையும், குற்றவாளியையும் கண்டுபிடிச்சாராங்கிறதுதான் மீதிக்கதை.

அறிமுகப் படத்திலேயே அட்டகாசப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். ஃப்ரெஷ்ஷான கதை, பரபரப்பான விறுவிறுப்பான சீட் நுனி திரைக்கதை, சுளீர் என்று உறைக்கும் பளீர் வசனங்கள், நம்மை கேரக்டர்களோடு ஒன்ற வைக்கும் மிஷ்கின் ஸ்டைல் டைரக்ஷன் என அமர்க்களப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீகணேஷ்.

ஒரு போலீஸ் ஸ்டேஷன் எப்படி இருக்கும், போலீஸ் உபயோகிக்கும் நிஜ துப்பாக்கி எப்படி இருக்கும், போலீஸ் விசாரணை எவ்வளவு  கேஷுவலாக இருக்கும், ஒரு வயதான கான்ஸ்டபில் குடும்பத்தில் அவர் ட்ரீட் செய்யபப்டும் விதம்,  துப்பாக்கி விற்கும் சினிமா போஸ்டர் வியாபாரி என டீடெயில்களுக்கு பஞ்சமே இல்லை.

தான் செய்த கொலைக்கு அப்பாவி சிறுவனை சிக்க வைப்பது, தீவிரவாதிகளுடன் சேர்ந்து கான்ஸ்டபிள் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்பெக்டர் குற்ற உணர்வே துளியும் இல்லாமல் இருப்பது, ஒரு வயதான கான்ஸ்டபிளுக்கு பிஎப் பணம் தர இந்த போலீஸ் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது, அதே சமயத்தில் இன்ஸ்பெக்டர் உடைத்த முதியவரின் டைப் ரைட்டிங் மிஷனை சொந்தமாக சப் இன்ஸ்பெக்டர் வாங்கிக் கொடுப்பது, அதே ஸ்டேஷனில் மனிதாபிமான அதிகாரியும் இருப்பது, மைனர் ஜெயிலில் சிறுவனை நல்வழிப்படுத்தும் வார்டன் என மிருகத்தனமும், மனிதமும் கலந்த மனிதர்களை நம் கண்முன்னே நிறுத்துகிறார் இயக்குனர்.

ஹீரோ வெற்றி முதல் படத்திலேயே தனக்கு ஓபனிங் சாங்கெல்லாம் கேக்காமல் தன் கேரக்டர் உணர்ந்து சிறப்பாகவே நடிசசிருக்காரு. இனிவரும் காலங்களில் நல்ல ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுத்தால் நல்ல நடிகராக நீடிப்பார்.

அபர்ணா பாலமுரளி வெறுமனே ஹீரோவோடு டூயட் பாடுவது அல்லாமல் ரிப்போர்டராக தன் கேரக்டரை செவ்வனே செய்திருக்காங்க… அதுவும் நூறு அர்த்தங்கள் பேசும் அந்த குண்டு கண்கள் சான்சே இல்லை.

படத்தின் நிஜ ஹீரோ எம்.எஸ். பாஸ்கர். அவர் தன் சினிமா வாழ்வில் இதுவரைக்கும் இப்படி ஒரு நடிப்பை நடித்ததில்லை என்றே சொலல்லாம். படம் முழுக்க இவரைச் சுற்றித்தான் கதை நகருகிறது. பாசம், கோபம், துரோகம், வலி, மனிதாபிமனாம், சூது, சோதனை என மனிதர் கிடக்கும் கேப்புகளில்லம் சிக்சர் அடிக்கிறார். உண்மையிலேயே தேசிய விருது வாங்கத் தகுதியான நடிப்பு.

மைம் கோபி. நாசர், சிவா, குட்டி தாதா, அவனது கள்ள மனைவி, அவளது கள்ளக் காதலன், அப்பாவி டாக்சி டிரைவர் என அனைவரும் இப்படத்திற்கு தங்களது யதார்த்தமான நடிப்பின் மூலம் பலம் சேர்த்துள்ளார்கள்.

படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ். சோல்டர் கேமராவை சுமந்துகொண்டு அந்தந்த கேரக்டர்களை நாமே பின்தொடர்வது போன்ற உணர்வைத் தந்துள்ளார்.

சுந்தர மூர்த்தியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டல். தமிழ் சினிமாவிற்கு இன்னொரு புது ரத்தம் பாய்ச்சக்கூடிய இசையமைப்பாளர் வந்துவிட்டார்.

எடிட்டர் மட்டும் இரண்டாம் பாதியில் கத்தரி போட்டிருக்கலாம்.

மொத்தத்தில்

‘எட்டு தோட்டாக்கள – குறி தவறவில்லை.

You might also like More from author

%d bloggers like this: