‘காற்று வெளியிடை’ – விமர்சனம்

மணிரத்னம் ரசிகர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ‘மௌனராகம்’, ‘நாயகன்’, ‘தளபதி’, ‘இருவர்’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’, ‘குரு’ என மணிரத்னத்தின் ஆகச் சிறந்த படங்களால் தன்னைத் தொலைத்துவிட்டு அவரின் அடுத்த படம் எப்போது வரும் என ரசனைத் தீனிக்காக வெயிட் பண்ணுபவர்கள் முதல் வகையினர்.

ஆனால் மணிரத்னம் சஞ்சிதா ஷெட்டி வீடியோ எடுத்தால் கூட, ‘’ஆஹா என்ன விஷுவல்பா..’’ என பொய் ஆச்சரிய முகம் காட்டும் இரண்டாம் வகையினர். மணிரத்னம் படத்தைப் பிடித்திருக்கிறது என்று சொன்னால்தான் தன்னை அறிவுஜீவியாக நினைப்பார்கள், தன்னை யூத்தாக மதிப்பார்கள் என்று போலி அறிவுஜீவி வேடம் போடுபவர்கள்.

இந்த இரண்டாம் வகையினர் தயவு செய்து இந்த விமர்சனத்தைப் படிக்க வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்.

‘ராவணன்’, ‘கடல்’ என்று தொடர் தோல்வியிலிருந்து மீள ‘ஓகே கண்மணி’ கை கொடுத்த காரணத்தாலோ என்னவோ மீண்டும் ‘காற்று வெளியிடை’ என்ற காதல் படத்தினை கொடுத்திருக்கிறார். என்ன பிரச்சினை என்றால் மணிரத்னம் படம் என்றாலே காட்சிகளிலும் சரி, காட்சி உருவாக்கத்திலும் சரி புதுமை நிரம்பி வழியும். நம்மை உற்சாகப்படுத்தும். ஆனால் இதில் சீனுக்கு சீன் மணிரத்னம் தன் முந்தையப் படங்களின் சீன்களையே வைத்திருக்கிறார். ‘’இது ‘ஆயுத எழுத்து’, இது ‘ரோஜா’, அப்புறம் ‘அலைபாயுதே’, இது ‘ஓகே கண்மணி’, க்ளைமாக்சில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்று அறுபது காட்சிகளில் அம்பத்தி ஐந்து காட்சிகள் அவரது படங்களின் அப்பட்டமான க்ளிஷேக் காட்சிகள்தான். மீதமுள்ளவை டிஸ்க்ளைமர், டைட்டில் கார்டு, எண்டு ரோலிங் டைட்டில்ஸ் ஆகியவைதான்.

மணி ஸார்… இன்னும் எத்தனை படங்களில் ஹை கிளாஸ் லவ்வை சொல்கிறேன் என்று க்ளோசப்பில் ஹீரோவும், ஹீரோயினும் செயற்கை முகபாவனைகளுடன், மெதுவாக காதல் வசனம் பேசுவதைக் காட்டுவீர்கள். சத்தியமா முடில..

அப்புறம் டைட்டில் கார்டு போடும்போதே கார்கில் வீரர்களுக்குனுப் போடுறார்.. ஆனா கடைசி வரைக்கும் அதை எதுக்கு போட்டார்னு அவருக்கே தெரியவில்லை. அதே மாறி கார்த்தி ஏதோ பைலட் ஆபிசராம். அவரும் ஃபிளைட் ஓட்டறத தெளிவாவேக் காட்டல… அதிதி ராவ வேணா நல்லா ஓட்டுறாரு…  

இதெல்லாம் கூட மன்னிச்சிரலாம். என்னதான் பாகிஸ்தான் நம்ம எதிரி நாடா இருந்தாகூட,  இவ்வளவு தத்தி இராணுவமாகக் காட்டியிருக்கக் கூடாது… இன்ஷா அல்லா…

அதெல்லாம் சரிப்பா.. படத்துல கதை என்னனு கேக்குறீங்களா…?

கதை

‘ரோஜா’ இன்டர்வல் ப்ளாக்ல அர்விந்த் சாமிய தீவிரவாதிங்க கடத்திட்டுப் போறமாறி நம்ம கார்த்திய பாகிஸ்தான் போலீசுங்கக் கடத்திட்டுப் போறாங்க. அவரு பாகிஸ்தான் ஜெயில்ல இருந்துட்டே அர்விந்த் சாமி மதுபாலாவ நெனச்சுப் பாடுற மாறி இதுல கார்த்தி நம்ம அதிதி ராவோட லவ் பீலிங்க ஃப்ளேஷ்பேக்ல நெனச்சுப் பாக்குறாரு. ‘இதயத்தைத் திருடாதே’ல பேஷன்டா இருக்குற நாகர்ஜுன் அவருக்கு ட்ரீட்மெண்ட் தர்ற டாக்டர்ட்ட ப்ரொபோஸ் பண்ற மாறி, தனக்கு ட்ரீட்மென்ட் குடுத்த டாக்டரான அதிதி ராவ்ட்ட  ப்ரோபோஸ் பண்றாரு.. அது எப்படினா ‘ஆயுத எழுத்து’ல சித்தார்த் த்ரிஷா பப்புல பேசிக்குவாங்களே.. அதே மாறி ஒரு பாலே டான்ஸ் பார்ட்டில பேசிக்குறாங்க… அப்புறம் ‘ஆயுத எழுத்து’ மாதவன் மீரா ஜாஸ்மின எப்படி அடிச்சு விரட்டிவிட்டு… அப்புறம் அவரே தேடித் போய்க் கூட்டியாந்து எப்படி ஒரேடியாக் கொஞ்சுவாரோ.. அதேமாறி நம்ம கார்த்தியும் ஹீரோயின திட்டுறாரு, இல்லனா கொஞ்சறாரு.. ‘ ஒருநாள் மௌன ராகம்’ ரேவதி மாறி அதிதி ராவ் ரிஜஸ்தர் ஆபிசுல காத்திருக்க, கார்த்தி கல்தா குடுக்க, கடுப்பாவுற அதிதி தான் கர்ப்பமா இருக்கிறதா கார்த்திட்ட சொல்லிட்டு குட்பை சொல்லிட்டுப் போயிடுறாங்க..  கர்ப்பமா இது எப்பனு நாம முழிக்கிறோம்..

இந்த நேரத்துலதான் ஃப்ளேஷ்பேக் முடிஞ்சு பாகிஸ்தான் ஜெயில்லருந்து நம்ம ‘வாகா’ படத்துல விக்ரம் பிரபு தப்பிக்கிறத விட செம ஈஸியா தப்பிச்சு இந்தியா வந்து அதிதி ராவப் பாக்க, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ கிளைமாக்ஸ்ல எப்படி நந்திதா தாஸ் தன் குழந்தைக்கிட்ட உருகறாங்களோ அப்படி கார்த்தியும் அவர் குழந்தையிடம் உருக, படம் முடிகிறது. (ஸ்ப்ப்பாஆஅ..)

ம்ம். கதையைப் படிக்கிற உங்களுக்கே மூச்சு முட்டுதுன்னா படம் பாத்த எங்களுக்கு எப்படிலாம் நாக்குத் தள்ளியிருக்கும்…

‘சித்தப்பா’ என்று சுற்றிக் கொண்டிருந்த ‘பருத்தி வீரன்’ கார்த்திக்கு இதில் ரொமாண்டிக் யூத் கேரக்டராம்.  என்னதான் கார்த்தி சிறப்பா நடிச்சிருந்தாலும் ஏனோ ஒட்டவே இல்லை. கார்த்தி ஸார் நீங்க யூத் இல்ல… யூத் மாதிரி..

படத்தின் சில ஆறுதல்களில் ஹீரோயின் அதிதி ராவின் நடிப்புதான். அந்நிய முகமாக இருந்தாலும் அற்புதமான நடிப்பால் நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

அப்புறம் ‘அலைபாயுதே’ விவேக், சொர்ணமால்யா போல இதில் ஆர்.ஜே.பாலாஜி. ருக்மணி.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்கு நிச்சயம் ப்ளஸ்தான். ஆனால் இசைக்கு ஏற்ற இடம் இப்படத்தில் இல்லை என்பதே உண்மை.

ரவி வர்மனின் உழைப்பு அபாரம்.

மொத்தத்தில்

‘காற்று வெளியிடை’ – ‘’வரணும்… மணி ஸார் நீங்க வரணும்… பழைய மணி ரத்னமா திரும்பி வரணும்…’’

You might also like More from author

%d bloggers like this: