“அவசர சட்டம் ஒரு கண்துடைப்பு, எங்களுக்கு தேவை நிரந்தர தீர்வு” : தீர்க்கமாக பேசும் மாணவர்கள்!

167

அவசர சட்டம் கொண்டு வந்து தமிழர்களை ஏமாற்ற முடியாது என்றும், தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் தீர்க்கமாக முடிவெடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகின் பல பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மோடி அவர்கள், ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சட்ட வல்லுநர்களை ஆலோசித்து தமிழக அரசே அவசர சட்டம் இயற்ற முடியுமா என்பதை ஆய்வு செய்து, தமிழக அரசு அவசர சட்டத்திற்கான வரைவு ஒன்றை தயார் செய்தது.

அவசர சட்டத்திற்கான வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று, பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பின்னர் தமிழக கவர்னர் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டை நடத்தலாம். தற்போது சட்ட வரைவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரண்டு நாட்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றார்.

ஆனால் அவசர அவசரமாக சட்டம் இயற்றி மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டுக்கு தற்காலிக தீர்வு காண முயற்சிப்பதாகவும், எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். தமிழக அரசின் முடிவுக்காக உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தீர்ப்பை ஒரு வாரம் ஒத்தி வைத்திருக்கும் நிலையில், ஒரு வார இடைவெளியில் ஜல்லிக்கட்டை நடத்திவிட்டு அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மீண்டும் போராட வேண்டி இருக்கும் என்றும், பீட்டா அமைப்பு மீண்டும் தடை வாங்க முயற்சி செய்யும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இந்தியாவில் பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டு்ம் என்றும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு காணும் வகையில், காளை மாடுகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் திரும்பப்பெற மாட்டாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தீர்க்கமாக தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *