‘என்னால் இப்போது எதுவும் செய்ய முடியாது’!- முதல்வர் ஓ.பி.எஸ்.ஸிடம் பிரதமர் மோடி கைவிரிப்பு

234

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்று இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்தியாவில் பீட்டாவை தடை செய்ய வேண்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், சமூக ஆர்வர்கள் என்று பல தரப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த பிரச்னை குறித்து மௌனம் சாதித்து வந்த தமிழக முதல்வர் இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும், போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மாணவர்களிடம் உறுதி அளித்தார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காத வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் பன்னீர் செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமரை நேரில் சந்தித்த முதல்வர், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், வர்தா புயல் நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு பாரட்டத்தக்கது என்றும், தற்போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தின் வறட்சி குறித்து விரைவில் நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *