அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா!

162

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா இன்று பொறுப்போற்றுக்கொண்டார். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் போயஸ் கார்டனில் இருந்த சசிகலாவிடம் வழங்கப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும், வரும் 31-ம் தேதி (இன்று) கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று அமைச்சர்களுடன் மெரினா கடற்கரை சென்ற சசிகலா, அங்குள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தநிலையில், பொதுச் செயலாளராக பதவியேற்க சசிகலா போயஸ் கார்டனில் இருந்து நண்பகல் 12.04 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்டார். 12.12 மணிக்கு சசிகலா வந்தடைந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை பெற்றுக் கொண்ட சசிகலா, அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் அறையில் ஜெயலலிதா நாற்காலியில் சசிகலா அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். அவர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். பின்னர் அறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, கட்சியினருக்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் சசிகலா தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *