தொலைக்காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை உரையாற்றவுள்ளார்.

174

புதுதில்லி: தொலைகாட்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை (டிச.31-ம் தேதி)உரையாற்றவுள்ளார்.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வழிகள் சிலவற்றையும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதனை பலமுறை மாற்றியும் அமைத்தது.

இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இரு அவைகளையும் முடக்கியது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, வங்கி வாசலில் நீண்ட நேரம் காத்திருந்ததாலும், வேறு சில காரணங்களுக்காகவும் சிலர் உயிரிழந்தனர். சில்லறை தட்டுப்பாடு, ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லாத சூழல், வங்கிகளில் நீண்ட வரிசை, அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பின் அதனை ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டுமே இனிமேல் மாற்ற முடியும், அதற்கும் கால வரம்பு உள்ளது.

இதனிடையே, தொலைகாட்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை (டிச.31-ம் தேதி)உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பு முடிந்து 50 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமரின் உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *