ஜெயலலிதா மரணம்: உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்கும்படி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

170

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி, உண்மையை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று, திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்களுக்கும், பலத்த சந்தேகங்களுக்கும் இடம் இருப்பதாக, ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை நேற்று விசாரித்த விடுமுறைக் கால நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜெயலலிதா மரணத்தில் தங்களுக்கும் சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

குறிப்பாக, நீதிபதி வைத்தியநாதன், இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், ஜெயலலிதாவின் சடலத்தை தோண்டி எடுத்து ஆய்வு நடத்தவும் உத்தரவிடுவேன் எனக் கூறியிருந்தார். இது பல தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது, மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை பார்ப்பதற்கு, உறவினர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிடும்படி ஏற்கனவே திமுக வலியுறுத்தி வருகிறது.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனும் சந்தேகம் எழுப்பியுள்ளார். இனியும் இந்த விவகாரத்தில் தாமதம் செய்யாமல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் உரிய விசாரணை நடத்த, உத்தரவிட வேண்டும்.

இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஜெயலலிதா மரணத்தில் நடந்த உண்மை பற்றி நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில், அவர் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள நினைப்பது பொதுமக்களின் உரிமையுமாகும். இதுதொடர்பாகப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்து செயல்பட்டு, உண்மையை வெளிக்கொண்டுவர ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் கோரிக்கை கடிதம் ஒன்றை மத்திய அரசுக்கும் அனுப்பியுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *