“மணல் கயிறு – 2 ” – திரைவிமர்சனம்

349

கரு : தன் எட்டு நிபந்தனைகளுக்கு ஒத்து வராத மனைவியுடன் 34 வருடங்கள் வாழ்ந்து வரும் ஒருவரின் மகளுக்கும் அவரது நிபந்தனை களுக்கு ஒத்து வராத மணமகன் கிடைக்க அந்த ஜோடியின் ஏட்டிக்கு போட்டி நிலை இறுதியில் சமன்பாட்டு நிலைக்கு வந்ததா இல்லையா ? என்பதை விளக்கும் கருவுடன் வந்திருக்கும் படம் .

கதை : முதல்பாகத்தில் தன் எட்டு நிபந்தனைகளில் ஒன்றுக்கு கூட ஒத்து வராத பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.. திருமண தரகர் நாரதர் நாயுடு – விசு என்பதால் அவர் மீது முப்பத்து நான்கு வருடங்களாக பயங்கர வருத்தத்தோடு இருக்கும் கிட்டு மணி -எஸ் வி .சேகர்., சதா சர்வகாலமும் வேலை , வேலை எனஅலையும் தன் ஒரே மகள் பூர்ணாவுக்கு நாரதர் நாயுடு – விசு சம்பந்தப்படாது நல்லதொரு மணமகனை தேடிப் பிடிக்க வேண்டும் …என களத்தில் இறங்குகிறார்.

கிட்டு மணியின் மகளும் தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் .. என்றதும் அன்று ., மணல் கயிறு முதல்பகுதியில்அப்பா போட்ட நிபந்தனைகளைக் காட்டிலும் “பகீர் “ரகத்தில் எட்டு நிபந்தனைகளை போட்டுத் தாக்குகிறார். பத்தாயிரம் திருமணங்களை பிரமாதமாய் நடத்தி வைத்த பெருமை மிகு திருமண தரகர் நாரதர் நாயுடுவின் கைங்கர்யம் இல்லாது ,அந்த எட்டு கண்டீஷன்கள் அத்தனைக்கும் ஒத்து வரும் மணமகன்., கிட்டுவுக்கும் அவரது ஒற்றை மகளுக்கும் கிடைத்தாரா ? அல்வது, நாரதர் நாயுடு ., கிட்டுவின் மகள் திருமணத்திலும் கோலோச்சினார.?! என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்க்களுக்கு .. வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் ., நிறைய காமெடியாகவும் .
34 -ஆண்டுகளுக்கு முன் வந்த “மணல் கயிறு ” பட பாணியிலேயே சற்றே மார்டனாக விடையளிக்கிறது இந்த”மணல் கயிறு – 2 “. படத்தின் கதையும்,களமும்.

காட்சிப்படுத்தல் :”ஸ்ரீ தேணான்டாள் பிலிம்ஸ் ” என்.இராமசாமி தயாரிப்பில் ., பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த “மணல் கயிறு ” படத்தின் பாகம் இரண்டாக அதில் பிரதான பாத்திரமேற்ற
விசு – எஸ்.வி .சேகர்…
உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் முக்கிய பங்காற்ற ., சேகரின் வாரிசு அஸ்வின் சேகர் கதாநாயகராக நடிக்க, கதாநாயகியாக பூர்ணா நடிக்க ., புதியவர் மதன்குமார் இயக்கத்தில் வயிறு வலிக்கும் காமெடி காட்சிகள் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்க முழு நீள கருத்தாழமிக்க காமெடி படமாக வெளி வந்திருக்கிறது “மணல் கயிறு – 2 ”

கதாநாயகர் : கிட்டு மணி –எஸ்.வி .சேகரின் மருமகனாக ., அவரது நிஜ வாரிசு அஸ்வின் சேகர “பளிச் “என்று வந்து “நச் ” என்று நடித்திருக்கிறார்

சேகரின் மகள் பூர்ணா போடும் எட்டு கண்டீஷன்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லாது எட்டுக்கும் பக்காப் பொருத்தம் … என தன்னைக் காட்டிக் கொள்ள ., அஸ்வின் செய்யும் திருட்டுத்தனங்கள் , சாகசங்கள் எல்லாம் சுவாரஸ்யம்.

கதாநாயகி : கிட்டு மணியின் செல்ல மகளாக பூர்ணா , … ஒரு சில சுற்றுகள் பருத்து கொஞ்ச நாளைக்கப்புறம் புஷ்டியான பூர்ணா , வசீகரம். படத்தில். அம்மணி போடும் எட்டு கண்டீஷன்கள் மாதிரியே..

பிற நட்சத்திரங்கள் : திருமண தரகர் நாரதர் நாயுடுவாக விசு, அசட்டு கிட்டு மணியாக எஸ் . வி . சேகர் , அவரது இல்லாளாக ‘தென்றலே என்னைத் தொடு’ ஜெயஸ்ரீ , செம்புலி ஜெகன் , டெல்லி கணேஷ் , ஷாம்ஸ் , ஸ்வாமிநாதன் , எம்.எஸ்.பாஸ்கர் , நமோ நாராயணா , ஜார்ஜ் உள்ளிட்டவர்களில் கிட்டு _ சேகரின் அசட்டுத்தன ஏமாற்றங்களும் , நாரதர் – விசுவின் நன்மை கலகங்களும் அழகிய ஆன்ட்டி ஜெயஸ்ரீ மாதிரி சுவாரஸ்யம்.

பலம் : 34 ஆண்டுகளுக்கு முன் .கே.பாலசந்தர் தயாரிப்பில் விசு இயக்கத்தில் ., எஸ் . வி .சேகர் நடித்து
வெளிவந்த மணல் கயிறு படத்தின் இரண்டாம் பாகமாக சேகரும் விசுவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க சேகரின் வாரிசு அஸ்வின் சேகர் நாயகராக நடித்து இப்படம் வந்திருப்பது பெரும் பலம் .

பலவீனம் : விசுவின் ‘கணீர் ‘குரல், ஏதேதோ உடல் உபாதைகளால் அவரிடமிருந்து காணாமல் போயிருப்பது கொஞ்சம் பலவீனம்.நாயகரின் பருமனும் சற்றே பலவீனம்.

தொழில்நுட்பகலைஞர்கள் : எஸ்.வி.சேகரின் கதை , திரைக்கதையில் வழக்கமாகத் தூக்கலாகத் தெரியும் டிராமாத்தனம் ., இதிலும் கொஞ்சம் அதிகம். என்றாலும் , காமெடியை ரசிக்கலாம்.

அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பு பலேதொகுப்பு இல்லை … என்றாலும் ரசிகனை படுத்தாத தொகுப்பு., கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக் கொள்ளும் ஓவியப் பதிவு.

தரணின் இசையில் அஸ்வின் சேகர் ,அனிரூத் ரவிச்சந்திரன் உள்ளிட்ட எல்லோரும் இன்றைய டிரண்டுக்கு ஏற்றபடி பாடி , ஆடியிருக்கும்
‘ஒ ராஜாத்தி ராஜன் … ‘, ‘யாரு பெத்ததோ என்ன பண்ணுதோ … ‘ , ‘அடியே தாங்க மாட்டே …’ , ‘முதல் மழை விழுந்ததே … ‘ , ‘வேட்டிய தூக்கிக் கட்டு ..’ உள்ளிட்ட பாடல்கள் வெவ்வேறு வித ரசமஞ்சரி .அனிரூத் பாடலில் இளம் இசைஞர் தரணும் கிடாருடன் தலை காட்டியிருப்பதும் .,அனிரூத்தும் இவரது இசையில் பாடி ஆடியிருப்பதும் படத்திற்கு பெரிய ப்ளஸ்!

இயக்கம் : மதன்குமாரின் வசனம் மற்றும் இயக்கத்தில் , சில டிரமாடிக் காட்சிகள் ., ரசிகனின் நம்பிக்கையை தகர்த்தாலும் , “புரியாத பிரியம் பிரியும் போது தான் புரியும் … “, ” நீ கொஞ்சம் இறங்கி வந்திருந்தா, நான்., இவ்வளவு தூரம் ஏறி வந்திருக்க வேண்டியதில்லை….”, “இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினைக்கூட பேசினா தீர்ந்துடும் .பட் ,புருஷன் பொண்டாட்டி பிரச்சினை….. பேச பேச வளர்ந்துகிட்டு தான் போகும் .. அந்த சைடு இழுக்குறப்போ , இந்தப் பக்கமும் ,இந்த பக்கம் இழுக்குறப்போ … அந்தப் பக்கமும் விட்டுக் கொடுத்தா தான் … குடும்பம் கரை சேரும்.” என்பது உள்ளிட்ட நிதர்சன டயலாக் “பன்ச் “கள் படத்த்ற்கு பெரும் பலம் .

மொத்தத்தில் .., தன் மகனை வைத்து., தனது கதை , திரைக்கதையில் “மணல் கயிறு – 2 ” – படத்தையும் தன் பாணியில் ., சமீபத்திய சமூக அரசியல் நிகழ்வுகளை நக்கல் , நையாண்டியாக இலைமறை காயாக வைத்து சரியாகவே படமாக்கியிருக்கிறார் எஸ் .வி .சேகர். அது , இக்கால ரசிகர்களால்போற்றப்படுமா? தூற்றப்படுமா ..? பொறுத்திருந்து பார்க்கலாம்.?!”

பைனல் “பன்ச் “ : “மணல் கயிறு – 2′ – ‘நிச்சயம் சிரித்து சிரித்து புண்ணாக போகுது ரசிகனின் வயிறு !”
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *