மாவீரன் கிட்டு திரைவிமர்சனம் / Maaveeran Mittu Movie Review

144

பிரிவினை அதிகமாக இருந்த காலம் அது, எவன் கேள்வி கேட்கிறானோ அவனை புரட்சியாளன் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்று அவனை ஒடுக்க நினைக்கும் அதிகார வர்க்கம் என 80களில் நடந்து கொண்டிருந்த கொடூரமான தினங்கள்.

பழநிக்கு பக்கத்தில் இருக்கும் புதூர் எனும் கிராமத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என மக்களை பிரித்து தெருக்களை பிரித்து வைத்திருக்கிறார்கள். மேல் ஜாதிக்காரன் இருக்கும் தெருக்குள் கீழ் ஜாதிக்காரன் சென்றால் வெட்டு குத்துதான். இதனை எதிர்த்து பார்த்திபன் போராடுகிறார். நம் ஜாதி மக்கள் படிப்பிலும், பகுத்தறிவிலும் சிறந்து விளங்க வேண்டுமென நினைக்கிறார். இவரின் கனவு முதல் விதையாக விஷ்ணுவை கலெக்டர் ஆக்க முயற்சி செய்கிறார். ஆனால், வேண்டுமென்றே இவரை ஒரு கொலை வழக்கில் சிக்க வைத்துவிடுகிறார் அந்த ஊர் போலீஸ் அதிகாரியான ஹரிஷ் உத்தமன். அதன்பின் ஜாமினில் வெளியே வருகிறார். மீண்டும் ஹரிஷ் உத்தமன் பிடியில் விஷ்ணு சிக்கிவிடுகிறார். அதன்பின் விஷ்ணு காணாமல் போகிறார். மக்களுக்காக விஷ்ணு செய்யும் காரியம்? பார்த்திபனின் மாஸ்டர் பிளான் என விறுவிறுப்பாக நகர்கிறது திரைக்கதை.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் பார்த்திபனின் ஒவ்வொரு வசனமும் மனதில் இறங்கி அப்படியே பதிந்துவிடுகிறது. குறிப்பாக ஹரிஷ் உத்தமனிடம் பார்த்திபன் சொல்லும் ஒரு வசனம் “எங்ககிட்ட கை நீட்டி பேசுற நீ, என்னைக்காவது கை கட்டி பேசுற காலம் வரும்” என கூறும்போது திரையரங்கில் விசில் சப்தம் பறக்கிறது.

கிட்டுவாக விஷ்ணு, தன் மக்களுக்காக எதையும் செய்ய துடிக்கும் ஒரு இளைஞனின் உண்மை கதை என்பதால் கதாபாத்திரத்திலிருந்து வெளியே செல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராம மக்களில் ஒருவராக சூரி நடித்திருப்பது ஆச்சர்யத்தை தருகிறது. டாப் காமெடியன் இப்படி இயக்குனருக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஸ்ரீதிவ்யா வழக்கம்போல சிரிச்சி சிரிச்சி நம் மனதை கொள்ளையடித்துவிடுகிறார்.

இமானின் இசையில் இளந்தாரி மற்றும் இணைவோம் ஆகிய பாடல்கள் படத்தின் ப்ளஸ்களில் ஒன்று. பின்னணி இசை படத்திற்கு பெரிய முதுகெலும்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு ஏ.ஆர்.சூர்யா கொடைக்கானல் பெரிய பள்ளத்தையும், அதன் சுற்றுப்புற இயற்கையையும் கண்ணுக்கு இதமாக காட்டியிருப்பது அருமை.

இயக்குனர் சுசீந்திரனின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு அழுத்தம் இருக்கும். ஆனால் மாவீரன் கிட்டுவில் அழுத்தம் இல்லை வெறி இருந்திருக்கிறது அதை காட்சி வடிவமாக மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்கிற வெறி நன்றாகவே தெரிகிறது. சுசீந்திரனின் படைப்பில் மாவீரன் கிட்டுவுக்கே முதல் இடம்.

மொத்தத்தில் மாவீரன் கிட்டுவுக்கு வைக்கலாம் திருஷ்டி பொட்டு
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *