‘அட்டு’ – விமர்சனம்

வடசென்னையில் வாழும் ‘கோரிப்பாளையம்’ இளைஞர்களின் ‘சுப்ரமணியபுர’ துரோகக் கதையே ‘அட்டு’.

அப்பா, அம்மா இல்லாமல் அனாதையாக சுற்றிக் கொண்டிருக்கும் அட்டுவும், அவனது நண்பர்களும் ஒரு ஆயாவின் அரவணைப்பில் வளர்கிறார்கள். பிஞ்சிலேயே பழுத்த பழமாக, சிறு வயதிலேயே  கத்தி எடுக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கவுன்சிலரும், இவர்களும் அண்ணன் தம்பிகளாகவே பழகி, வாழ்ந்து வருகிறார்கள். யெஸ். நாம் கெஸ் பண்ணியதுபோலவே கவுன்சிலரே ஒரு கட்டத்தில் இவர்களை போட்டுத் தள்ள, இவர்களின் எதிரி கும்பலிடம் பேரம் பேச, முந்திக் கொண்டு அவரை ‘முன்னால்’ அனுப்புகிறான் அட்டு. அதே கும்பலின் கடத்தல் சரக்கு பிரச்சினையால் அட்டுவை கொல்ல அவனது நண்பனிடமே ஆதரவு கோர, வெகுண்டெழும் நண்பன் அட்டுவின் உயிரைக் காப்பாற்றுகிறான். கவுன்சிலர் கொலையால் போலீஸ் அட்டு கும்பலை வலை வீசி தேட, ஒரு பெரிய தாதாவிடம் சரணடைகிறார்கள்.

அந்த தாதாவிற்கு லட்டு மாறி பொண்ணு இருக்க, அட்டுவின் நண்பனுக்கு அதைத் தொட்டுத் திங்க ஆசை. அதாவது காதல் வர, அந்த பெண்ணும் சம்மதிக்க, அட்டுவின் உதவியோடு அந்த காதலர்களும், நண்பர்களும் தப்பித்து வேறு ஊருக்கு செல்ல, கோபமாகும் தாதா அட்டுவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார். தாதாவின் ஆட்களுக்கேப் போக்குக் காட்டும் அட்டு இறுதியில் தன் நண்பனின் துரோகத்தாலேயே உயிர் விடுகிறான்.

தனியாக இருக்கும்போது நட்புக்காகத் தன் உயிரையே ரிஸ்க் எடுத்துக் காப்பாற்றும் நண்பன், அவனுக்கென்று ஒரு துணை வரும்போது சுயநலத்தால் அதே நண்பனின் உயிரையே எடுக்கும் துரோகியாக மாறுவான் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார் அறிமுக இயக்குனர் ரத்தன் லிங்கா.

‘சிட்டி ஆஃப் காட்’ படத்தை நினைவூட்டும் அட்டகாசமான மேக்கிங்கிற்காகவே படக்குழுவை பாராட்டலாம். படம் பார்க்கும் நமக்கே குப்பைக் கூடத்திலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் உணர்வை தந்திருப்பதில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார். 

அறிமுக நாயகனாக ரிஷி ரித்விக் அட்டுவாகவே வாழ்ந்திருக்கிறார். முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு தத்ரூபமான நடிப்பு. எங்கேயும் ஓவர் ஆக்டிங்கோ, பிசிறோ இல்லாதது சிறப்பு.

ரவுடி ஹீரோவை காதலிக்கும் வழக்கமான ஹீரோயின் வேடம்தான் என்றாலும் தனது இயல்பான நடிப்பால் நம் மனதில் இடம் பிடிக்கிறார் அர்ச்சனா.

யோகிபாபு மற்றும் அவரது நண்பர்கள் செய்யும் அலப்பறைகள் செம சிரிப்பு. கவுன்சிலர், நண்பன், தாதா கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் செல்லும்.

போபோ சசியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு உறுதுணையாக இருந்து நம்மை ரசிக்க வைக்கின்றன.

ராட்சத உழைப்பைக் கொட்டியுள்ள ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்திற்கு தமிழ் சினிமாவில் இன்னும் பெரிய உயரங்கள் காத்திருக்கின்றன.

வடசென்னைவாசிகளின் நட்பு, காதல், கோபம், தாபம், துரோகம் என அவர்களின் வாழ்க்கையை மிக நெருக்கமாக, நேர்த்தியான மேக்கிங்கில் பதிவு செய்த இயக்குனர் ரத்தன் லிங்கா திரைக்கதையில் இன்னும்கூட விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் 

‘அட்டு’ – சந்தேகமில்லாமல் ‘ஹிட்டு’.

You might also like More from author