‘கவண்’ – விமர்சனம்

எத்தனையோ பேர மீடியா கிழிச்சதப் பாத்திருக்கோம், மீடியாவையே கிழிச்சுத் தொங்கவிட்டா அதுதான் ‘கவண்’. மீடியா மூலம் நாட்டில் எவ்வளவோ நல்ல ‘மாற்றங்களை’ கொண்டு வரலாம் என்று நினைக்கும் விஜய் சேதுபதி அதிலுள்ள ‘நாற்றங்களை’ பொறுக்க முடியாமல் பொங்கி எழுவதே கதை.

கேடுகெட்ட பொறம்போக்கு அரசியல்வாதியான போஸ் வெங்கட்டின் ஒரு பேக்டரியால் அதனைச் சார்ந்திருக்கும் ஊரும், அந்த ஊரின் ஏரியும் மாசடைந்ததால் அந்த ஊர் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனை தட்டிக் கேட்கும் சமூக தன்னார்வ அமைப்பினரான விக்ராந்தின் தோழியை தனது ஆட்கள் மூலம் கற்பழிக்க வைக்கிறார் போஸ் வெங்கட்.

இந்த உண்மையை தான் வேலை செய்யும் ஜென் ஒன் சேனலின் மூலம் மக்களுக்கு சொல்ல நினைத்து ‘அண்டர்கவர்’ பேட்டி ஒன்றை அரேன்ஜ் செய்கிறார் விஜய் சேதுபதி. அந்த சேனலோ அரசியல்வாதிக்கு சொம்புத் தூக்கும் விதமாக உண்மையை மறைத்து, பொய் முலாம் பூச கடுப்பாகிறார் விஜய் சேதுபதி.

அதே விஜய் சேதுபதிக்கு அரசியல்வாதி போஸ் வெங்கட்டை நேருக்கு நேர் ‘முதல்வன்’ ஸ்டைலில் பேட்டி எடுக்கும் வாய்ப்பு வர, மீடியாவின் ஸ்கிரிப்டைத் தூக்கி எரிந்துவிட்டு, நாக்கை பிடுங்குகிறமாறி நாலு கேள்விகள் கேட்க, கடுப்பாகும் போஸ் வெங்கட் விஜய் சேதுபதியை காட்டுத்தனமாக அடிக்க, அதையும் லைவ்வாக சூட் பண்ணி மக்களுக்கு அவரைத் தோலுரித்துக் காட்ட ஐடியா செய்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் சேனல் எம்.டி. சுயலாபத்துக்காக சில தகிடுதத்தங்கள் செய்து போஸ் வெங்கட்டை உத்தமர் என புகழுரை செய்ய, கொந்தளிக்கும் விஜய் சேதுபதி எம்.டி. ஆகாஷ் தீபுவை கழுவி ஊற்றிவிட்டு, தனது நண்பர்களுடன் வெளியேறி, உப்புமா சேனலான டி.ஆரின் முத்தமிழ் சேனலில் வேலைக்கு சேர்ந்து ஜென் ஒன் சேனலையும், போஸ் வெங்கட்டையும் மண்டையை பிய்க்க வைத்து மக்கள் மன்றம் மூலம் குற்றவாளிகள் என நிரூபிப்பதே மீதிக்கதை.

‘’மாடியிலிருந்து எச்சில் துப்பினால் கீழே விழும். கீழேயிருந்து எச்சில் துப்பினால் அந்த மாடியே விழும்’’ என்பதுதான் கவண் சொல்லும் சேதி. ‘’வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல’’, மீடியாவை இன்னொரு மீடியா மூலம் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ‘ஜென் ஒன்’ என்ற சேனலின் பெயரிலேயே ஒரு சேனலை ஞாபகப்படுத்தும் டெக்னிக் சூப்பர். அதன் இண்டீரியரில் நடக்கும் கூத்துக்கள் மூலம் ‘வெற்றி’கரமான டிவியை தொங்க விட்டிருப்பதும் செம.

குறிப்பாக ஒரு மீடியா நினைத்தால் ஒரு செய்தியை எப்படியெல்லாம் மாற்றித் தந்து சம்பந்தப்பட்ட பிரச்சினையின் அடிப்படையையே மாற்ற முடியும் என்பதை பட்டவர்த்தனமாக படம் பிடித்திருக்கினறனர். சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் ஜூரிகள் அவமானப்படுத்தப்படுவது, டிஆர்பிக்காக கலந்து கொள்ளும் கண்டஸ்டுகள் பலிகடாவாக்கப்படுவது, அரசியல்வாதிக்கு சொம்புத் தூக்கி, ஒரு பெண் போராளியை பைத்தியமாக சித்தரிப்பது, தங்கள்  சேனலின் ரீச்சுக்காக கொலைக்கு உடந்தையாகவே செயல்படுவது என மீடியாவின் நிஜ முகத்தைத் தோலுரித்திருக்கிறார். குறிப்பாக அந்த விஜய் சேதுபதி போஸ் வெங்கட்டை இன்டர்வியூ செய்யும் இன்டர்வல் ப்ளாக் பட்டையைக் கிளப்புகிறது.

அரசியல்வாதிகளின் போராட்டத்தில் ரவுடிகள் புகுந்து ஆட்டையைக் கலைப்பது, அதனை படம் பிடித்தாலும் உண்மையான புட்டேஜை சுயநலத்திற்காக தனியாக சேமித்துக் கொள்வது, பேக்டரியால் ஒரு ஊரும், ஏரியும் பாதிக்கப்படுவது, அதனை எதிர்க்கும் போராளிகள் ஒடுக்கப்படுவது, பெண் போராளிகள் பலாத்காரம் செய்யப்படுவது, டிஆர்பிக்காக மீடியா இரட்டை நாடகம் போடுவது, முஸ்லிம் போராளியை அழிக்க தீவிரவாதி சாயம் பூசுவது என கே.வி.ஆனந்த், சுபா, கபிலன் வைரமுத்து கூட்டணி திரைக்கதையில் சொல்லாதே செய்திகளே இல்லை எனலாம்.

அதேபோல வசனங்கள் சரவெடி.

விஜய் சேதுபதி வழக்கம்போல தூள் பறத்தியிருக்கிறார். தயவு செய்து அடுத்த படத்திலாவது குறைகள் எதாவது சொல்லுமளவுக்கு நடிங்க பாஸ். எல்லாப் படத்துலயும் நல்லாவே நடிச்சா எப்படி…?

மடோனா செபாஸ்டின் ஒரு கமர்சியல் பட ஹீரோயின் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

டி.ஆர். தனது வழக்கமான எனர்ஜியுடன் சதமடித்திருக்கிறார். கதையின் தன்மையை உணர்ந்து ஆங்காங்கே அடக்கியும் வாசித்திருப்பது சபாஷ்.

விக்ராந்திற்கு பேர் சொல்லும் கேரக்டர். அசலான நடிப்பைத் தந்திருக்கிறார்.

வில்லன் போஸ் வெங்கட், ஆகாஷ் தீபு, பாண்டியராஜன், ஜகன் என எல்லாரும் தங்கள் பங்கை நிறைவு செய்திருக்கிறார்கள்.

சில காட்சிகளே ஆனாலும் நாசர் அட்டகாசம். அந்த ‘ப்ரெஸ்டிஜ்’ டிவிஸ்ட் ஸ்வீட் சர்ப்ரைஸ்.

இசை ஹிப் ஹாப் தமிழா ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஆக்சிஜன்’ பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசை ஓகே.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்தின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. அதே போல் ஆர்ட் டைரக்டரின் வியர்வை திரையில் வழிகிறது. அவ்வளவு தத்ரூபம்.

மாற்றான், அனேகனில் சறுக்கிய கே.வி.ஆனந்த் இதில் மீண்டும் ‘கோ’ ரேஞ்சிற்கு உயர்ந்திருக்கிறார்.

மொத்தத்தில்

‘கவண்’ – ‘கோ 2’

  

You might also like More from author

%d bloggers like this: