‘டோரா’ – விமர்சனம்

வாரமானால் வெள்ளிக் கிழமை வருகிறதோ இல்லையோ பேய் படம் ஒன்று வந்துவிடுகிறது. இத்தனைக்கும் பேய் பட சீசன் எக்ஸ்பியர் ஆகப் போகிற ஸ்டேஜில்தான் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மாயா’ எனும் பேய் படம், பேய் சீசனை மீண்டும் ரெனிவல் ஆக்கியது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்திலும், இயக்குனர் சற்குணம் தயாரிப்பிலும் நயன்தாரா நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘டோரா’.

இதுவரைக்கும் கெட்டவர்களால் உயிர் பலியாகி, பேயாக சுற்றுபவர்களுக்கு அவர்களை பழிக்குப் பழி வாங்க ஏதோ ஒரு மீடியம் தேவைப்படும். அந்த மீடியம் பொம்மையாக இருந்தால் ‘வா அருகில் வா’, டிவியாக இருந்தால் ‘யாவரும் நலம்’, தண்ணியாக இருந்தால் ‘ஈரம்’, செல்போனாக இருந்தால் ‘ஹலோ நான் பேய் பேசறேன்’, இதுவே காராக இருந்தால் அதுதான் ‘டோரா’.

தனது அப்பாவின் தயவால் சென்னை சிட்டியின் பெரிய கால் டாக்சி நிறுவனம் நடத்தும் அத்தையும், மாமாவும் அப்பாவை அவமானப்படுத்திவிட, அவர்களுக்கு போட்டியாக கால் டாக்சி நிறுவனம் ஆரம்பிக்கும் நோக்கத்தில் முதல் முதலாக ஒரு பழைய காரை விலைக்கு வாங்குகிறார்கள் நயன்தாராவும் அப்பா தம்பி ராமையாவும். ஆனால் அந்த காரில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணரும் நயனும், தம்பி ராமையாவும் ஒரு மாந்திரீக பாட்டியிடம் சென்று ஐடியா கேட்க, அவர் சொன்னபடி செய்தும் அமானுஷ்ய சக்தியின் வேலை தொடர்கிறது. உச்ச பட்சமாக அந்த கார் நயன் கண்முன்னாலேயே ஒருவனை கொடூர கொலை செய்ய அதிர்ச்சியடைகிறார். மோப்பம் பிடிக்கும் போலீஸ் காரின் மூடியை வைத்து, காரை வைத்திருக்கும் நயனை சந்தேகப்படுகிறது. ஒரு கட்டத்தில் காரின் டார்ச்சர் தாங்காமல் காரிடமே  மன்றாட, அந்த காரில் உள்ளது ஒரு நாயின் ஆவி என்றும், அதன் பரிதாப ஃப்ளாஷ்பேக்கும் தெரிய வர, காருக்கு உறுதுணையாக மீதியுள்ள வில்லன்களை எப்படி அழிக்கிறார் என்பதே மீதிக்கதை.

‘’நாயை கூண்டுல பாத்திருப்போம், ஜூவுல பாத்திருப்போம், டிவில பாத்திருப்போம், சினிமால பாத்திருப்போம், காட்டுலப் பாத்திருப்போம், வீட்டுல பாத்திருப்போம்…  கம்பீரமா கார்ல இருந்து பாத்திருக்கோமா…?, அதுவும் கர்ண கொடூரமா கொலை செஞ்சு பாத்திருக்கோமா…? பாக்காதவங்க இந்த ‘டோரா’ படத்தைப் பாக்கலாம். ஆனால் ‘டோரா’ முழுசா பாக்கற மாறி இருக்கா, இல்ல ‘டோர’ தொறந்துட்டு ஓடி வர்ற மாறி இருக்காங்கிறதுதான் ட்விஸ்ட்.

தாஸ் ராமசாமி நயன்தாராவ வச்சு ஒரு மரண மாஸ் பேய் படம் எடுக்கனும்னு முடிவு பண்ணி இயக்கியிருக்காரு. ஆனா இது மாஸ் படமாவும் இல்லாம, பேய் படமாவும் இல்லாம நாய் படமா அதாவது நாயே பேயா மாஸ் காட்டுற படமா இருக்கு. அதனால் இதுல நயன்தாராவுக்குனு பெரிய வேலை எதுவும் இல்ல அப்டிங்கிறதே படத்துக்கு பெரிய மைனஸ். பெட்ஷீட் விக்கிறவனும், பானி பூரி விக்கிறவனும்தான் வில்லன்களாக இருக்குறதாலயே அவனுங்க கேரக்டரும் ஸ்ட்ராங்க இல்ல.. படம் ஆரம்பிச்சு நயன்தாராவும், தம்பி ராமையாவும் காமெடினு பண்ற அலப்பறைல நம் செவிப்பறைதான் கிழியுது.

இருந்தாலும் அந்த பரிதாப ஃபிளாஷ்பேக் நம் மனதைப் பிசைகிறது.

நாய், பேய் படத்தில் தனக்கும் ஸ்கோப் இருக்கும் என்று நம்பி களமிறங்கியிருக்கும் நயனுக்கு ஒரு சல்யூட். ‘நானும் ரவுடிதான்’ காதும்மாவை பல இடங்களில் நினைவுபடுத்தும் நடிப்பு.

தம்பி ராமையா நயனின் அப்பாவாக நிறைய ‘அட்வான்டேஜ்’ எடுத்திருக்கிறார். சில இடங்களில் அவர் செய்யும் காமெடி நயனையும், பல இடங்களில் நம்மையும் கடுப்பேற்றுகிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் ‘ஹரீஸ்’ உத்தமன் பல காட்சிகளில் ‘ப்ரீஸ்’ உத்தமன் என்று சொல்லும் அளவுக்கு ஸ்லோமோஷன் காட்சிகள் என்று ஏக பில்டப்கள். ஆனால் அவர் பானி பூரி விற்கும் குற்றவாளிகளையே கண்டுபிடிக்க படம் முழுக்க திணறுகிறார். ‘துருவங்கள் பதினாறு’ ரஹ்மானைவிடவும் மெதுவாக துப்பறிகிறார். படம் முடிந்து நாம் வெளியேறிய பின்பும் கூட துப்பறிந்து கொண்டே இருக்கிறார்.

விவேக் மேர்வினின் இசை கார் அறிமுகத்திற்கு பிறகு அசத்துகிறது.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஆரம்பக் காட்களில் சீரியலை பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும் பிற்பாதியில் பெரும்பலமாகவும் அமைந்துள்ளது.

மொத்தத்தில்

‘டோரா’ – தல ‘கேரா’ இருக்கு…

  

80%
Awesome
  • Design

You might also like More from author

%d bloggers like this: