‘பாம்பு சட்டை’ – விமர்சனம்

‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு இயக்குனர் மனோபாலா தயாரித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘பாம்பு சட்டை’. முதல் படத்தில் அப்பாவி மக்களை ஏமாற்றும் ‘சதுரங்க வேட்டை’ கும்பலை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்தவர் இதில் ‘சதுரங்க வேட்டை’ கும்பலால் பாதிக்கப்படும் அப்பாவி இளைஞன் கதையை தேர்வு செய்துள்ளார்.

தண்ணி கேன் போடும் வேலை செய்யும் பாபி சிம்மா ஒரே வீட்டில் தனது அண்ணி பானுவுடன் வசிக்கிறார். ஊராரின் எள்ளல் பேச்சைக் கண்டுக்காமல் வாழும் அவரின் தற்போதைய ஒரே லட்சியம் அண்ணிக்கு இரண்டாம் திருமணம் மூலம் நல்வாழ்வை அமைத்துத் தருவது. அண்ணியின் மனதை கரைத்து நல்ல மனிதரான ஆட்டோ டிரைவரை மாப்பிள்ளையாக மணமுடிக்க முயல, அவருக்கோ எட்டு லட்சம் கடன். அந்த கடனை தீர்த்தால் அண்ணி கல்யாணம் சுபமாக நடக்கும் என்பதால் எட்டு லட்சம் பணத்திற்காக கள்ள நோட்டு கும்பலிடம் சகவாசம் வைத்து, மொத்த பணத்தையும் இழக்க, வீறு கொண்டெழுந்த  சிம்மா  ‘சதுரங்க வேட்டை’ கும்பலை எப்படி சட்டையை கிழித்து ஓட விடுகிறார் என்பதே இந்த ‘பாம்பு சட்டை’.  

கலப்பு திருமணத்தால் பானுவின் கணவன் மர்மான முறையில் ரயில்வே ட்ராக்கில் இறந்திருப்பது, வேறு சாதி பையனுடன் வாழ்ந்த ஒரே காரணத்தால் பெற்ற பெண்ணையே வீட்டில் சேர்க்காமல் அடித்து விரட்டுவது, அண்ணியை அம்மாவாகவும், கொழுந்தனை குழந்தையாகவும் பார்க்கும் பாபி சிம்மா, பானு உறவின் புனிதம், சாக்கடை சுத்தம் செய்பவரின் குழந்தைகளை ஏளனமாக பார்க்கும் சமூகம், எல்லாவற்றிற்கும் மேலாக படத்தின் முக்கிய மையச் சரடான கள்ள நோட்டு கும்பலின் இருள் பக்கங்களை விஸ்தாரமாக விளக்கியிருப்பது என முதல் படத்திலேயே சமூகத்திற்கு நல்கருத்துக்களை படம் முழுக்க தெறிக்கவிட்டு சிக்சர் அடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆடம் தாசன்.

‘’உங்கப்பா செத்துட்டா உங்கம்மாவ வீட்டை விட்டு துரத்திடுவியா…?’’, ‘’உங்கப்பா வேலையைப் பத்தி அவன் கேவலமா  சொன்னதைவிட, நீ அதுக்காக அழுவறதுதான் உண்மையிலேயே பெரிய தப்பு’’, ‘’தப்பான வழில போய் பணம் சம்பாதிக்கிறதுக்கு நடு ரோட்டுல அம்மணமா ஓடலாம்’’ என சின்ன சின்ன வசனங்களில் கூட சமூக அக்கறை மினுமினுக்கிறது.

இவ்வளவு பாசிட்டிவ் விஷயங்கள் இருக்கும் படத்தில் லவ் போர்ஷன் மட்டும் திருஷ்டி பொட்டு. இரண்டாம் பாதியின் இழுவையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

கணீர் குரலோன் பாபி சிம்மாவிற்கு ‘ஜிகர்தண்டா’விற்குப் பிறகு  நிஜமாலுமே நடிக்க வாய்ப்பு. நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் அசால்ட்டாக செய்ய வேண்டிய லவ் சீன்களில் மட்டும் இன்னும் ‘அசால்ட் சேது’வாகவே இருக்கிறார். ‘’இந்த மூஞ்சில ஏன் ரொமான்ஸே வர மாட்டேங்குது…?’’ என்ற அவரின் முந்தைய பட டயலாக் நினைவுக்கு வருகிறது.

கீர்த்தி சுரேஷ் மேக்கப் இல்லாமல் நிஜ அழகுடன் வருகிறார். லவ்வுகிறார். சிம்மாவை திருத்துகிறார்.

படத்தில் நிஜ ஹீரோயின் அண்ணியாக வரும் பானுதான். உயர் ரக அழகுடன் குடிசையில் எளிமையாக வாழும் பாந்தமான கேரக்டரில் காந்தமாக நம்மை ஈர்க்கிறார்.

சார்லி, குரு சோமசுந்தரம், மொட்டை ராஜேந்திரன், கே.ராஜன் என அனைவருமே கவனம் ஈர்க்கிறார்கள்.

பலம் சேர்க்க வேண்டிய அஜீஸின் இசை பலவீனமானதுதான் பிரச்சினை. அதுவும் பின்னணி இசை..? ம்கூம்.. இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் அஜீஸ்.

வெங்கடேஷின் ஒளிப்பதிவு நம்மை திரைக்குள் இழுக்கிறது.

மொத்தத்தில்

‘பாம்பு சட்டை’ – கனகச்சிதம்.

You might also like More from author

%d bloggers like this: