‘எங்கிட்டே மோதாதே’ – விமர்சனம்

‘’ம்.. இப்ப இருக்குற போட்டி நடிகர்களோட ரசிகனுங்க பேஸ்புக்ல போடுற வெட்டிச் சண்டை இல்ல.. நிஜமாலுமே போடுற வெட்டு சண்டைதான் அந்த கால ரசிகனுங்கக்கிட்ட… அதுவும் கமல், ரஜினி ரசிகனுங்கதான் வெறித்தனத்தின் உச்சத்தில் இருந்தாங்க… அதெல்லாம் ஒரு காலம்’’ என அங்கலாய்ப்பவர்களுக்கான ஒரு ஸ்வீட் ரீவைண்டிங் மெமரிஸ்தான் ‘எங்கிட்டே மோதாதே’.

ரஜினி கட் அவுட் வரையும் தீவிர ரஜினி ரசிகனான நட்டியும் கமல் கட் அவுட் வரையற வெறித்தன கமல் ரசிகனான ராஜாஜியும் தோஸ்துங்க… நாகர்கோவில்ல வேல செஞ்ச ஓனர்ட்ட சண்ட போட்டுட்டு, திருநெல்வேலிக்கு வர்றாங்க ரெண்டு பேரும். அந்த ஊர்ல அரசியல்வாதியாவும், தியேட்டர் ஓனர் ப்ளஸ் டிஸ்ட்ரிபியூட்டர் என மல்டிபிள் போஸ்டிங்கில் அப்பா டக்கராகவும் வலம் வர்றாரு ராதாரவி. அவரின் அல்லக்கையும், நொல்லக்கையுமாக விஜய் முருகன். இவரு ஊர்ல எவன் எவன் வீட்ல சண்டை, சச்சரவோ அங்கெல்லாம் ஆமை புகுந்த வீடு கணக்கா அமெரிக்க அண்ணன் மாதிரி பஞ்சாயத்துப் பண்றேன்னு சொல்லிட்டு, பதுவுசா அவுங்க சொத்த ஆட்டையப் போடணும்னு நெனைக்குற அளவுக்கு அம்புட்டு நல்லவரு.

தியேட்டர்ல அவங்க தலைவனுங்க படம் ரிலீசப்போ போடுற சண்டைல கேண்டீன், சைக்கிள் பார்க்கிங்குனு எல்லாத்தையும் போட்டு உடைக்குற கமல், ரஜினி ரசிகனுங்க ஒரு கட்டத்துல ஊர்ப் பஞ்சாயத்த நாசூக்கா தீத்து வச்சு நல்ல பேர் வாங்க, தன்னோட செல்வாக்குக்கு பங்கம் வந்துடும்னு கடுப்பாகுற ராதாரவியும், விஜய் முருகனும் அடுத்து ரிலீசாகவுள்ள ‘சத்யா’ படத்தோட கட் அவுட்ட வைக்கக் கூடாதுன்னு எல்லாரையும் மிரட்ட, கமல் ரசிகனான ராஜாஜி தன் கையாலேயே கமல் கட் அவுட்ட வரைஞ்சு தியேட்டர் முன்னாடி நிறுத்தராறு… இதனால் விஜய் முருகன் ராஜாஜிய அடிக்க, நண்பன் அடி வாங்கறதப் பாத்து கடுப்பான நட்டி விஜய் முருகன துவைச்சு அனுப்பறாரு.. கோபமான ராதாரவி ஏற்கனவே பர்சனல் பஞ்சாயத்துல நட்டிகிட்ட முட்டிக்கிட்டு நிக்குற ராஜாஜிய வச்சே நட்டிய கொல்ல சாணக்ய ஸ்கெட்ச் போட, நட்டி உசுரு கெட்டியா இல்ல சாம்பல் சட்டியாங்கிறதே க்ளைமாக்ஸ்.

படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே நாமளே எண்பது காலகட்டத்துக்கு போனமாறி ஃபீலிங்க கொண்டு வந்ததுலயே ஜெயிச்சுட்டாரு அறிமுக இயக்குனர் ராமு செல்லப்பா… சபாஷ்..

நடை, உடை, எடை, பாவனை, தோரணை, ரோதனை என அச்சு அசலாக ‘தளபதி’ காலத்து ரஜினியாகவே வலம் வருகிறார் நட்டி. தில்லாக எதையும் சந்திப்போம், சாதிப்போம்னு படம் முழுக்க ஒரு பாசிட்டிவ் எனர்ஜியோடயே நடிச்சு தூள் கிளப்பியிருக்காரு.

கமல் ரசிகனா ராஜாஜி. ‘மூடர் கூடத்துக்கு’ அப்புறம் நின்னு வெளையாடுற கேரக்டர். சிறப்பாக செய்துள்ளார். ராஜாஜியின் தங்கையாக சஞ்சிதா ஷெட்டி, காதலி பார்வதி நாயர் ரெண்டு பேருமே கட் அவுட்டுக்கு கீழ ஓரமா போடுற ஆர்ட்ஸ் பேர் அளவுக்கே கதைக்குப் பயன்பட்டிருக்காங்க. ராதாரவி இன்னும் நூறு படங்களில் இதே கதாபாத்திரத்தில் நடித்தாலும் அலுக்காது நமக்கு. அதே கம்பீரம், வில்லத்தனம் கலக்கல். அல்லக்கை விஜய் முருகன் குள்ளநரித்தன வேடத்தில் பொருத்தம். நட்டியின் நண்பனாக முருகானந்தம் ஜாலி, கேலி வசனங்களால் க்ளாப்ஸ் அள்ளுகிறார்.

கமல், ரஜினி ரசிகனுங்க பிரச்சினைய வச்சு இன்னொரு ‘சுப்ரமணியபுரம்’ கொடுக்க முயற்சி செஞ்சிருக்காரு இயக்குனர். ஆனா இது கமல், ரஜினி ரசிகனுங்க சண்டையாவும் இல்லாம, ரசிகனுங்க, அரசியல்வாதிங்க சண்டையாவும் இல்லாம ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலு கணக்காவே திரைக்கதை இருக்கிறதால ஒரு சலிப்பு வர்றது என்னவோ நிஜந்தான்.

அது மட்டுமில்ல சாதாரண கட் அவுட் வரையற நட்டிய ஏதோ சூப்பர் ஹீரோ ரேஞ்சிற்கு பில்டப் பண்ணியதுதான் கொஞ்சம் உறுத்தல்..

இருந்தாலும் முதல் படத்துலயே வித்தியாசமான, யாரும் சொல்லாத கமல் ரஜினி ரசிகர்கள் பிரச்சினைய மையமா வச்சு இயக்கிய ராமு செல்லப்பாவிற்கு இந்தப் படம் சந்தேகமில்லாம வெற்றிப் படம்தான்.

பீரியட் பிலிம் என்பதை உணர்ந்து உழைத்துள்ள ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவை உளமார பாராட்டலாம். ஆனால் கடைசி அஞ்சு நிமிடங்களில் டெக்னிக்கல் ஃபால்ட்டால் நம்மை டைவர்ட் செய்ய வைக்கிறது கேமரா.

நடராஜன் சங்கரனின் இசையில் ‘பாயும் புலி’, ‘உன்னை பாத்தேன் ராசாத்தி’ பாடல்கள் ஹிட் வகை. பின்னணி இசையில் அதிரடி.
கலை இயக்குனர் ஆறுச்சாமியின் அசாத்திய திறமை படம் முழுக்க தெரிகிறது.

மொத்தத்தில்

‘எங்கிட்டே மோதாதே’ – கமர்ஷியல் கட் அவுட்

60%
Overall Movie Rating
  • Tamil Cinema Movie Rating

You might also like More from author

%d bloggers like this: