‘கடுகு’ – விமர்சனம்

‘’வெளுத்ததெல்லாம் பாலும் இல்ல.. பொங்குறது எல்லாம் பீரும் இல்ல…’’, ‘’கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது… விறகு கொழுந்து விட்டு எரிஞ்சாலும் குத்து விளக்கு ஆகாது…’’

இந்த பழமொழிகளுக்கு என்ன அர்த்தமோ அதுதான் ‘கடுகு’ படம் நமக்கு சொல்லும் சேதி…

‘கோலிசோடா’வில் பொங்கி ‘பத்து எண்றதுக்குள்ள’ அந்த வெற்றியை தவறவிட்ட விஜய் மில்டன் ‘’எண்டு கார்டு போட்டு எகத்தாளமாடா பண்றீங்க’’ என்ற கடுப்பில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் ‘கடுகு’ தாளித்திருக்கிறார்.

‘’நாலு பேருக்கு முன்னாடி தப்பு பண்ணுனா எவ்வளவு கேவலமோ அதே தப்ப யாருமே இல்லாதப்போ பண்ணுனா அது அதவிட பெரிய கேவலம்’’ என்ற ‘அம்பி’ பிலாசப்பியுடன் வாழ்ந்து வரும் புலிப்பாண்டி ராஜகுமாரன் ஊர் விழாக்களில் புலி வேஷம் போட்டு ஆடுபவர். வேலை மாற்றல் காரணமாக நாகர் கோவிலுக்கு வரும் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷனின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க அவர் கூடவே சமையல் சேவகனாக வருகிறார். அங்கே ஊர்க்காவலனாக கெத்து காட்டும் குத்து சண்டை வீரர் பரத். கலை அழிந்துபோனதால் ‘களை’ இழந்து வாடும் ராஜகுமாரனுக்கு அந்த ஊரின் பள்ளிக்கூட விழாவில் புலிவேஷம் கட்டி ஆட ஒரு வாய்ப்பு. இந்நிலையில் அதே ஊருக்கு பரத் வீட்டில் விருந்தாளியாக வரும் விஷமி மந்திரி அங்கே உள்ள பள்ளி சிறுமியின் மீது திடீர் சபலப்பட்டு அத்து மீற, தனது அரசியல் ஆசையால் மந்திரியின் ஆசைக்கு உடன்பட்டு வெத்தாக வெளியேறுகிறார் பரத்.

மந்திரியின் பிடியிலிருந்து தப்பினாலும் அதிர்ச்சியின் காரணமாக ஆற்றில் விழுந்து இறக்கிறார் அந்த சிறுமி. சிறுமியின் இறப்பின் காரணத்தை அறிந்த புலிப்பாண்டி ராஜகுமாரன் ‘அம்பி’யாக எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் அல்பாயுசில் போக, பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் ‘அந்நியனாக’ மாறி புலியாட்டம் ஆடி எப்படி பழிவாங்குகிறார் என்பதே மிச்சமுள்ள ‘அவதார’ கதை.

கதையின் நாயகன் புலிப்பாண்டியாக ராஜகுமாரன். உருவத்தில் கடுகு போல கருத்த, சிறுத்த ‘அப்பாவி’ அழகேசன், புலிவேஷம் கட்டினால் புல்லரிக்க வைக்கும் ஆட்டக்காரன் என அட்டகாசப்படுத்தியுள்ளார். இனி நல்ல இயக்குனர்கள் ‘நீ வருவாய் என’ ராஜகுமரனுக்காகக் காத்திருக்க வாய்ப்புண்டு.

நல்லவனும் இல்ல. கெட்டவனும் இல்ல. நல்லவனுக்குள்ள ஓரமாக சேர் போட்டு மறைஞ்சு உட்கார்ந்திருக்கிற கடுகளவு கெட்டவன் கேரக்டர்தான் பரத்திற்கு. சும்மா சொல்லக்கூடாது. லீடிங் ஹீரோவாக (அப்படியா…?) இருக்கும்போதே இப்படியொரு கேரக்டரில் நடித்திருப்பது பாராட்டத்தக்கது. அதுவும் ராஜகுமாரனிடம் அடி வாங்கி திணறுவது எல்லாம் இயக்குனர் மேல் பரத் வைத்த நம்பிக்கைக்கு சான்று.

‘குற்றம் கடிதலில்’ பணியாற்றிய பள்ளி ஆசிரியை வேலையை இதிலும் கன்டினியூ செய்கிறார் ராதிகா பிரசித்தா. அந்த படத்தில் ஸ்டிரிக்ட் டீச்சராக லாரியிலேயே சுற்றியவர் இந்தப் படத்தில் லாரி லாரியாக பரிதாபத்தை அள்ளிக் கொள்ளும் கேரக்டரை கனகச்சிதமாக செய்துள்ளார்.

பரத்தை காதலிக்கும் எடுப்பான அழகி சுபிக்ஷா துடுப்பாக பயன்படுகிறார் கதையோட்டத்திற்கு.

அனிருத்தாக வரும் பரத் சீனி, நல்ல போலீசான ஏ.வெங்கடேஷ், பள்ளிச் சிறுமி கேரக்டரில் வரும் பெண், அல்ப அரசியல்வாதியாக வெங்கட் என அனைவரும் இந்த கடுகிற்கு காரம் சேர்த்திருக்கிறார்கள்.

‘’ஒரு தப்பு நடக்கும்போது அதப் பாத்தும் தட்டிக் கேட்காமப் போற நல்லவங்கதான் உண்மையான கெட்டவங்க’’ என்ற வசன வரிக்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் விஜய் மில்டன். முதல் பாதியில் கேரக்டர்களின் குணாதிசயங்களை விளக்கும் லீட் சீன்களே அதிகம் இருப்பதால் ஒரு வித சலிப்பும், இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் பிரச்சினையின் தீவிரத்தை மெதுவாக உணர்த்துவதும் ஒருவித ஆயாசத்தையே தருகிறது. மேலும் படம் முழுக்க ஏதோ ஒரு தயக்கம் விஜய் மில்டனுக்கு இருந்து கொண்டே இருப்பதை உணர முடிகிறது. படத்தின் ஒன்லைனுக்கேற்ப படம் முன்பே முடிஞ்சிருச்சு. அப்புறம் எதுக்கு க்ளைமாக்ஸ்க்கு பிறகான பரத்தின் ஹீரோயிச தியாகி இமேஜ் சீன்கள்.

இந்த மாதிரி குறைகளை கடுகளவு எடுத்துக் கொண்டு, மலையளவு உழைப்புக் கொடுத்துள்ள விஜய் மில்டன் குழுவை தாராளமாய் வாழ்த்தலாம்.

அருணகிரியின் பாடல்கள் ரொம்பவே சுமார் (ரா)கம்தான் என்றாலும் பின்னணி இசை தூக்கல். ஜான் ஆபிரகாமின் கத்திரி இன்னும் கொஞ்சம் கத்தரித்திருக்கலாம்.

மொத்தத்தில்

‘கடுகு’ – சிறுத்தாலும் காரம் மட்டுமில்ல வீரியமும் குறையவில்லை.

80%
Awesome
  • Tamil Cinema Movie Rating

You might also like More from author

%d bloggers like this: