‘வைகை எக்ஸ்பிரஸ்’ – விமர்சனம்

Vaigai Express - Tamil Movie Review

’ஆஹா… மறுபடியும் ஒரு காட்டுக் கத்தல் காக்கிச் சட்டை படமா, கலாய்த்துத் தள்ளிடலாம்’’ என்று ஃபுல் ஃபார்மோடு தியேட்டருக்குள் புகுந்தவர்களை கால் மணி நேரத்திலேயே கட்டிப் போடுகிறது ஆர்.கே, ஷாஜி கைலாஷ் கூட்டணி. ஏற்கனவே ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ என இரண்டு படங்களில் வெற்றிக் கனியை சுவைத்தவர்கள் இப்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ மூலம் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் மூன்று இளம்பெண்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். டிவி ரிப்போர்ட்டர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும், அரசியல்வாதியின் மச்சினிச்சி தூக்கில் தொங்கியும் இறந்துகிடக்க, மூன்றாவதாகக் கொல்லப்பட்டதாக நினைத்த ஷூட்டர் பெண் மட்டும் கால் உசுராக கோமாவில் கிடக்கிறார். இந்நிலையில் கொலைப் பின்னணியில் இருப்பது அந்த ரயிலில் பயணம் செய்த தீவிரவாதிதான் என மீடியாக்கள் கூவிக் கொண்டிருக்க, ஆட்டக் களத்தில் இறங்குகிறார் ரயில்வே போலீஸ் ஆபீசரான ஆர்.கே.

முதல் சுற்றுலேயே தீவிரவாதியை பிடிக்கும் ஆர்.கே. இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது தீவிரவாதி இல்லை என்று கண்டுபிடிக்கிறார். அப்போ வேறு யார்தான் குற்றவாளி என்று விசாரணை வாளை வேகமாகச் சுழற்ற ஆரம்பித்து, தனது பொறி வைத்துப் பிடிக்கும் புலனாய்வுத் திறமையால் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார். டிவி ரிப்போர்டர், மினிஸ்டர் மச்சினிச்சி கொலைகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்தவருக்கு ஷூட்டர் பெண் கொலை மட்டும் கொஞ்சம் அதிகமாகவே வேலை வாங்க, எந்த ரயிலில் கொலை நடந்ததோ அதே ரயிலில் அதே பயணிகளோடு மீண்டும் ஒரு பயணத்தைத் துவங்கும் ஆர். கே. எப்படி இறுதிக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதே ‘தடக் தடக்’ க்ளைமாக்ஸ்.

ஹார்லிக்ஸ் அங்கிள் ஏஜ் ஆனாலும் என்னோட ஹீரோயினுக்கு என்ன ஏஜ், எத்தனை டூயட், அதில் எத்தனை குத்து சாங் என மனசாட்சியை சவுகார்பேட்டை சேட்டுகளிடம் அடமானம் வைத்துவிட்டு கேள்வி கேட்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் நீது சந்திரா, (அதுவும் டபுள் ஆக்ட்), சுஜா வாருணி, கோமல் ஷர்மா, இனியா என நான்கு ஹீரோயின்கள் இருந்தும் இயக்குனரின் திரைக்கதையிலும், தன் கதாப்பாத்திரத்தின் மேலும் நம்பிக்கை வைத்து நடித்திருக்கும் ஆர்.கே.விற்கு பூங்கொத்து அல்ல பூந்தோட்டமே தரலாம். அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே கைத்தட்டல் வாங்கும் ஆர்.கே. அதனை படம் முழுக்க தக்க வைத்துக் கொள்ள அதற்கான கடும் உழைப்பைத் தந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் தானே அடித்து, நடித்திருக்கிறார். ஒரு போலீஸ் ஆபிசருக்கான அத்தனை மிடுக்கும் ஆர்.கே.வின் நடிப்பில் இருக்கிறது.

சாத்வீக ஜோதிகா, ரஃப் அண்ட் டஃப் ராதிகா என இரு வேடங்களில் நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார் நீது சந்திரா.

த்ரில்லிங்கான திரைக்கதையில் படம் முழுக்க சிரிப்பு போலீசாக வந்து நம்மை ரிலாக்ஸ் பண்ணும் நாசர் கச்சிதம்.

இனியா, கோமல் சர்மா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், அனூப் சந்திரன், சித்திக், சுமன், ரமேஷ் கண்ணா, சுஜா வாருணி, பவன், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி, மனோபாலா, சிங்கமுத்து என ரயில் பேசெஞ்சர் லிஸ்டை விட நீளும் அளவிற்கு இத்தனை கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் அத்தனை பேருக்கும் ஸ்கோப்பும், ஹோப்பும் கொடுத்திருக்கும் ஷாஜி கைலாஷ் பாராட்டப்பட வேண்டியவர்.

ராஜேஷ் குமார் டைப் க்ரைம் த்ரிலலர் கதையில் கோட்டயம் புஷ்பநாத் ஸ்டைல் ஆக்ஷன் மசாலா சேர்த்து அதக்களம் செய்வது சுரேஷ் கோபி காலத்தில் மட்டுமல்ல இன்றும் கூட தனக்கு கை வந்த ‘கொலை’ ஸாரி ‘கலை’ என்பதை ‘வைகை எக்ஸ்பிரஸ்’ மூலம் அழுத்தமாகவே நிருபித்திருக்கிறார் ஷாஜி கைலாஷ்.

பிரபாகரனின் விறுவிறு வசனமும், சஞ்சீவ் குமாரின் மிரட்டல் ஒளிப்பதிவும், தமனின் தட தட இசையும் இந்த வைகை எக்ஸ்பிரசை மேலும் த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸாக்குகின்றன.

மொத்தத்தில்

‘வைகை எக்ஸ்பிரஸ்’ – வொன்டர் எக்ஸ்பீரியன்ஸ்

Overall Movie Rating
70%
Good

Overall Movie Rating

  • Tamil Cinema Movie Rating

You might also like More from author